×

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை வந்தார் தோனி: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க உள்ளது. சுமார் 2 மாதம் கிரிக்கெட் ரசிகர்களை முழுக்க முழுக்க கட்டிப்போட இருக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்திலேயே சென்னை-மும்பை அணிகள் விளையாட இருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்து வருகிறது.

ஆட்டம் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடும் வீரர்கள், சென்னைக்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனான தோனி, நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தார். தோனியின் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள், விமான நிலையத்தில் திரண்டனர். சிலர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு சென்ற தோனி, அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டு ரசித்தார். இதனை, சி.எஸ்.கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் உள்ளூரில் பயன்படுத்த இருக்கும் பேருந்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும் ஸ்பெஷல்தான். காரணம், களத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி இறங்க இருப்பதுதான். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் அரையிறுதிக்குப் பிறகு தோனி இந்திய அணிக்காக விளையாடவில்லை. இதனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஐ.பி.எல் தொடர்தான் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என கூறப்பட்டது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே, சி.எஸ்.கே அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி சென்னை வந்தடைந்தார்.


Tags : Dhoni ,Chennai ,cricket series ,IPL ,fans , Welcome to Chennai, Dhoni, fans, enthusiasts
× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது