×

சிவகாசி - விருதுநகர் சாலையில் எச்சரிக்கை போர்டு இல்லாத பாலங்களால் விபத்து அபாயம்: நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம்

சிவகாசி: சிவகாசி - விருதுநகர் சாலையில் போக்குவரத்து  எச்சரிக்கை பலகை  இல்லாத பாலங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. சிவகாசி- விருதுநகர்  வழித்தடத்தில்  27 கி.மீ  தூர மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை கடந்த  சில மாதங்களுக்கு  முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை 7 மீட்டர் அகல சாலையாக உள்ளது. சிவகாசி - விருதுநகர் சாலையில்  சிறிய மற்றும் பெரிதாக 9 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 பாலங்களில் போக்குவரத்து விதி முறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி  உயிரிழந்து வருகின்றனர். திருத்தங்கல் ஆர்டிஓ அலுவலகம் அருகே செங்குளம் கண்மாய் ஓடையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாலத்தின் முகப்பு பகுதியில் சிவப்பு விளக்கு எச்சரிக்கை கம்பம் வைக்கப்படவில்லை.

மேலும் பாலத்தில் ஒரு பகுதி தடுப்பு சுவர் முகப்பு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் எதிரே வாகனங்கள் வரும் போது பாலத்தை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இதில் பல விபத்துக்கள் நடந்தும்  நெடுஞ்சாலை துறை கண்டு கொள்ளவில்லை. இதே போன்று பாலம் வளைவு பகுதியில் அமைந்துள்ளது. ஆனால், கண்மாய் கரையை ஓட்டி தடுப்புகள் வைக்கப்படவில்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் ஆபத்து நிலவுகிறது.
இந்த பாலத்தை அடுத்து ஒரு கி.மீ தூரத்தில் ஆனைக்குட்டம் அணை நீர் போக்கு கால்வாயில் பெரிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் முகப்பில் எந்த வித  பாதுகாப்பு எச்சரிக்கை கம்பமும்  வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் ஒளிரும் சிவப்பு விளக்கு கம்பமும் நடப்படவில்லை.

இதனால் இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பாலத்தில் எதிர், எதிரே விலகி செல்லும் போது பாலத்தின் சுவர் தெரியாமல் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சாலையில் அதிக விபத்துக்கள் நடந்து வருகிறது. ஆனாலும், நெடுஞ்சாலை துறையினர் விபத்துக்களை தடுக்க  உரிய  நடவடிக்கை எடுக்கவில்லை. வடமலாபுரம் அருகே ஆனைக்குட்டம் அணை நீர்போக்கு பாதையில்  மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடைமேடை சேதமடைந்து கிடக்கிறது. இதில் நடந்து செல்வோர் கவனக்குறைவாக சென்றால் பாலத்தின் ஓட்டை வழியாக விழுந்து உயிரிழக்கும் ஆபத்து உள்து. இந்த பாலத்தில் தடுப்பு சுவர் முகப்பு பகுதியிலும் போக்குவரத்து எச்சரிக்கை அறிவிப்புகள், சிவப்பு ரிப்ளக்டர் கம்பம் போன்ற எந்த வித பாதுகாப்பு முறைகளும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடனும், மரண பயத்திலும் செல்ல வேண்டியுள்ளது.

அர்ச்சுனா நதி உப்போடையில்  கனமழை காலங்களில்  10 அடி உயரம் வரை வெள்ள நீர்  செல்லும். இந்த பாலத்தில் தடுப்பு சுவர்கள் சேதமடைந்து கிடக்கிறது. பாலம் வளைவு பகுதியில் எச்சரிக்கை கம்பங்கள் அமைக்கப்படவில்லை. எனவே,  மாநில நெடுஞ்சாலை துறையினர் மேம்பாலங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

இரவு நேரங்களில் ஒளிரும் சிவப்பு விளக்கு கம்பமும் நடப்படவில்லை. இதனால்  இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் பாலத்தில் எதிர், எதிரே விலகி  செல்லும் போது பாலத்தின் சுவர் தெரியாமல் விபத்துக்கள் ஏற்பட  வாய்ப்புள்ளது

Tags : road ,Sivakasi - Virudhunagar ,bridges ,Highway Department , Highway Department,negligence , bridges ,warning board, Sivakasi - Virudhunagar road
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது