×

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் ரூ.10 கோடி ஹெராயின் கடத்தல்

*  மரப்பெட்டி கடற்கரையில் ஒதுங்கியது
*  சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் ஹெராயின் கடத்தப்பட்டது. ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் மரப்பெட்டி படகில் இருந்து தவறி விழுந்து கடற்கரையில் ஒதுங்கியது. இதை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு அருகே சல்லிக்குளம் கடற்கரையில் நேற்று காலை ஒரு மரப்பெட்டி கரை ஒதுங்கியது. அந்த பகுதி மீனவர்கள் மரப்பெட்டியை பார்த்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், கடலோர காவல்படையினர் சென்று மரப்பெட்டியை கைப்பற்றினர். பின்னர் அதை பிரித்து பார்த்த போது, உள்ளே பலகையால் அறை அறையாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் ஹெராயின் போதை பவுடர் நிரப்பப்பட்டிருந்தது. இதன் எடை மொத்தம் 10 கிலோ. மதிப்பு ₹10 கோடி ஆகும். பின்னர் இந்த ஹெராயினை நாகை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

நாகை மற்றும் வேதாரண்யம் பகுதியில் கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் பொருட்கள் போலீசுக்கு பயந்து கடலில் வீசப்படுவதாலோ, அல்லது தவறி விழுவதாலோ கரை ஒதுங்குவது அடிக்கடி நடந்து வருகிறது.அதுபோல் இந்த மரப்பெட்டியும் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஹெராயின் பெட்டி எங்கிருந்து கடத்தப்பட்டது. கடத்தியது யார் என்பது பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் கடந்த 24ம் தேதி வேளாங்கண்ணி அருகே செருதூரில் 15 கிலோ ஹெராயினுடன் மரப்பெட்டி ஒதுங்கியது. ஒரு வாரத்தில் மட்டும் ₹25 கோடி மதிப்பில் ஹெராயின் பிடிபட்டுள்ளது. இது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்  அப்பகுதியில் உள்ள மீனவ கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு மணி நேரத்தில் இலங்கை செல்லலாம்
நாகை மாவட்டம் கோடியக்கரை, மணியன்தீவு, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து படகில் சென்றால் 50நிமிடம் முதல் 1 மணி நேரத்துக்குள் இலங்கையில் உள்ள மாதகல், மைலட்டி மீனவ கிராமங்களுக்கு சென்று விட முடியும். இந்த பகுதியில் இந்திய, இலங்கை கடற்படை தீவிர ரோந்தில் இருக்கும். அந்த கண்காணிப்பையும் மீறி தான் இந்த கடத்தல் நடக்கிறது. ஒருவேளை கடலோர காவல்படையோ, ராணுவமோ சுற்றி வளைத்து விட்டால் கடத்தி செல்லப்படும் போதை பொருட்களை கடலில் தள்ளி விட்டு விடுவார்கள். அவ்வாறு கடலில் வீசப்படும் பொருட்கள் தான் அவ்வப்போது கரை ஒதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : Sri Lanka ,Vedaranyam , Heroin trafficking ,Sri Lanka, boat, Vedaranyam
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்