×

சிதம்பரம் அருகே அரசு பள்ளி அசத்தல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள்

* சிற்றுண்டி, இரவு உணவு வழங்கல்: வீட்டிற்கு செல்ல வேன் வசதி சாதித்து நன்றி செலுத்துவோம் என மாணவர்கள் நெகிழ்ச்சி

சிதம்பரம்: சிதம்பரம் அருகே இப்படியும் ஒரு அரசுப் பள்ளி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, சிற்றுண்டி, இரவு உணவும் அளித்த தலைமை ஆசிரியர். பாதுகாப்பாக வீட்டுக்கு செல்ல இலவச வேன் வசதியும் செய்து கொடுத்து அசத்தி வருகின்றார்.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது சி.முட்லூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 632 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிக்கல்வியில் 10ம் வகுப்பில் 75 மாணவ, மாணவிகளும், 11ம் வகுப்பில்  104 மாணவ, மாணவிகளும், 12ம் வகுப்பில் 78 மாணவ, மாணவிகளுமாக மொத்தம் 257  மாணவர்கள் இந்த ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். பொதுவாக அரசு பள்ளிகள் என்றாலே மாலை பள்ளி நேரம் முடிவடைந்த உடன், அனைவரும் வீட்டிற்கு சென்று விடுவர். ஆனால் இதிலிருந்து மாறுபட்டு ஒரு முன்மாதிரிப் பள்ளியாக விளங்கி வருகிறது சி. முட்லூர் அரசு மேல்நிலை பள்ளி.

  காலை 8.30 மணிக்கே பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள், மாலை 04.30 மணிக்கு பள்ளி முடிந்த உடன் வீட்டிற்கு சென்று விடக் கூடாது என்கிற உளவியல் ரீதியான சிந்தனையை மாணவர்களுக்கு விதைத்துள்ளார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிவாசகன். பள்ளி வகுப்பு நேரம் முடிந்த உடன் வகுப்பறைகளை விட்டு வெளியே வரும் மாணவர்கள் சிறிது நிமிட இடைவெளிக்கு பின்னர் வகுப்பறைகளின் முன்புறம் உள்ள மரத்தடி நிழலில் வகுப்பு வாரியாக அமர, சிறப்பு வகுப்புகள் துவங்குகிறது. அவர்களை தலைமை ஆசிரியர் மணிவாசகன், கண்காணித்தபடியே மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க, சக ஆசிரியர்களும் வகுப்பு வாரியாக மாணவ, மாணவிகளுக்கு துணை நிற்கின்றனர்.
  6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 45 நிமிடமும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் 15 நிமிடம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன் பிறகுதான் 10  மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தனித்துவம் வாய்ந்த சிறப்பு  வகுப்புகள் தொடங்குகிறது.

பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட மின் விளக்குகளின் வெளிச்சத்தில் மாணவர்கள் மீண்டும் படிப்பை துவங்குகின்றனர். அதற்கு முன்னதாக மாணவர்களின் சோர்வை போக்க தினமும் சிற்றுண்டியாக சுண்டல் வழங்கப்படுகிறது. புத்தகங்களை ஓரமாக வைத்து விட்டு வரிசையாக வரும் மாணவர்கள், பள்ளியிலேயே தயார் செய்யப்பட்ட சுண்டலை தட்டுகளில் வாங்கி ஓரமாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். இந்த இடைவெளி நேரத்தில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் பாடல்களும் ஒலி பரப்பப்படுகிறது.   வரலாற்றுச் சிறப்பும், தமிழ்மொழியின் சிறப்பையும் கொண்ட பழங்கால திரைப்படங்களிலிருந்து தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் வீரத்தையும் பேசும் பாடல்கள் மாணவர்கள் சுண்டல் சாப்பிடும் வரை ஒலி பெருக்கி மூலம் இசைக்கப்படுகிறது. வேர்க்கடலை, கொண்டைக் கடலை என தினம் ஒரு சுண்டல் வழங்கப்படுவதால் மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் படிக்கத் துவங்குகின்றனர்.

சிறப்பு வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இரவு 8 மணி வரை படிக்கின்றனர். அவர்களுக்கு பாடத்தில் ஏற்படும் சந்தேகங்கள் ஆசிரியர்களால் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது.  காலை 8 மணியளவில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இரவு 8 மணி வரை பள்ளியில் படிப்பதால், சராசரி பள்ளி நேரத்தை விட சுமார் 4 மணி நேரம் கூடுதலாக படிக்கின்றனர். இதனால் எந்த பாடத்தையும் விடாமல் படித்து முடித்து விடுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில்தான் தலைமை ஆசிரியரின் மனித நேயமும், மாணவர்கள் மீது பெற்றோருக்கும் மேலான தனது அக்கறையும் பளிச்சிடுகிறது. தலைமை ஆசிரியர் மணிவாசகனின் முயற்சியால், சுற்று வட்டாரங்களில் உள்ள தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் தனியார் பள்ளி உரிமையாளர்களின் பள்ளி வாகனங்களை வரவழைத்து, அதில் தனது பள்ளி மாணவர்களை ஏற்றி, பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கும் அக்கறையை வார்த்தைகளால் வர்ணிக்க  முடியவில்லை. அதோடு மட்டுமல்லாது காலை முதல் இரவு வரை படித்த மாணவ, மாணவிகளை தனது குழந்தைகளைப் போல எண்ணி இரவு உணவாக இட்லி, வடை, சாம்பார் போன்றவற்றையும் மாணவர்களுக்கு கொடுத்து வீட்டிற்கு சென்று சாப்பிடுங்கள் என கூறுவதுதான் தலைமை ஆசிரியரின் உதவும் குணத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் உச்சகட்டமாக திகழ்கிறது.

 அரசு பள்ளி என்றாலே மாணவர்கள் சரியாக படிக்க மாட்டார்கள். ஆசிரியர்கள்  ஒழுங்காக பாடங்களை சொல்லித் தர மாட்டார்கள். தேர்ச்சி சதவீதம் இருக்காது  என்ற நிலையை மாற்றி, இப்படியும் ஒரு அரசு பள்ளி இருக்கிறது என  முன்மாதிரிப் பள்ளியாக திகழ்கிறது சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு  பள்ளி. இதனால் இப்பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், சுற்று வட்டார  கிராம மக்கள் என அனைவரின் இதயங்களிலும் நீங்கா இடம் பிடித்து நிலைத்து  நிற்கிறார் அரசு பள்ளி தலைமையாசிரியரும், அவரது ஆசிரியர்  குழுவும்.

அரசு பள்ளியில் சேர தனியார் பள்ளி மாணவர்களும் ஆர்வம்
பள்ளியில் வேளாண் பிரிவில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்திலேயே காய்கறி தோட்டம் அமைத்து வெண்டைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், நூல்கோல் போன்ற காய்கறி பயிர்களை நட்டு, அதற்கு தனது சொந்த செலவிலேயே இயற்கை உரங்களை போட்டு அதில் காய்கறிகளை விளைவித்து மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டியாக திகழுகிறது. மாணவர்களுக்கு இவ்வளவு வசதிகளை செய்து கொடுப்பதற்கு பணத்திற்கு என்ன செய்கிறீர்கள் என தலைமையாசிரியரிடம் கேட்டால், புன்னகையுடன் நல்ல நண்பர்களை பெற்று இருக்கிறேன் எனக் கூறுகிறார்.

தனது பள்ளி மாணவர்களுக்காக செய்துள்ள வசதிகளைப் பற்றி கூறுகையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு முதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாகவும், அரையாண்டு பொதுத் தேர்வுக்கு பிறகு இந்த சிறப்பு வகுப்புகள் துவங்கி இரவு எட்டு மணி வரை வகுப்புகளை நடத்துவதாகவும், இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பள்ளியின் வசதிகளையும் பெருமைகளையும் பார்த்து தனியார் பள்ளி மாணவர்கள் கூட இந்த பள்ளியில் வந்து சேருகிறார்கள் என பெருமையுடன் கூறும் அவர், அடுத்த ஆண்டும் இந்த சிறப்பு வகுப்புகள் தொடரும் என்பதால் மாணவர் எண்ணிக்கை மேலும் உயரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்வில் வெற்றி பெற்று நன்றி செலுத்துவோம்: மாணவர்கள் நெகிழ்ச்சி
அரசு பள்ளியில் ஆசிரியர் செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து கூறும் மாணவர்கள்,  பள்ளியில் குழுவாக அமர்ந்து படிப்பதால் நன்றாக படிக்க முடிகிறது. பாடங்களில் உடனுக்குடன் எழும் சந்தேகங்களை ஆசிரியர்கள் நிவர்த்தி செய்வதாகவும், இதனால் கடந்த தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக கூறும் மாணவ-மாணவியர், குடிநீர், சுகாதாரம், உணவு, வாகன வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் வீட்டில் இருப்பதை விட நன்றாக செய்து கொடுத்திருப்பதால் எங்களால் நன்றாக படிக்க முடிகிறது என மகிழ்ச்சியும் தெரிவிக்கின்றனர். தங்களுக்காக நேரத்தையும், பணத்தையும் செலவிடும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வில் வெற்றி பெற்று, நல்ல மதிப்பெண்களைப் பெற்று, அவருக்கு நன்றிக் கடனை செலுத்துவோம் என நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் மாணவ, மாணவியர்.

Tags : School Assam General Exam ,Teachers ,School Assam General ,Chidambaram , Teachers conducting special classes ,students , write the Government School Assam General Exam , Chidambaram
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...