×

காட்டுத் தீயை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்காடு மலைப்பாதை சாலைகளில் சருகுகளை அப்புறப்படுத்தி தீ வைப்பு: வனத்துறை ஊழியர்கள் நடவடிக்கை

சேலம்: ஏற்காடு மலையில் காட்டுத் தீயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாதை சாலைகளில் சருகுகளை அப்புறப்படுத்தி வனத்துறையினர் தீ வைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் மரங்கள் காய்ந்து மொட்டையாகி வருகிறது. இலையுதிர் காலம் என்பதால், பெரிய மரங்களில் இருந்து இலைகள் உதிர்கிறது. அதேவேளையில் கொளுத்தும் வெயில் காரணமாக செடி, கொடிகள் காய்ந்து சருகுகளாக மாறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடர், ஆத்தூர், வாழப்பாடி கல்வராயன் மலை, மேட்டூர் பச்சமலை, பாலமலையில் மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. அதிலும், கடந்த பருவமழை காலத்தில் இந்த பகுதியில் அதிகளவு மழை பெய்ததால், செழிப்பாக செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. தற்போது, கோடை வெயிலுக்கு காய்ந்து சருகாகியுள்ளது. வழக்கமாக வனப்பகுதியில் தேங்கும் சருகுகளின் அளவை விட நடப்பாண்டு, மிக அதிகளவு தேங்கியுள்ளது.

இதனால், காட்டுத் தீ ஏற்பட்டால், வனமே எரிந்து நாசமாகும் சூழல் உருவாகியுள்ளது. இதன்காரணமாக, காட்டுத் தீயை தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். காட்டிற்குள் தீ தடுப்பு கோடிகள் அமைத்தல், வனக்கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், காட்டிற்குள் அத்துமீறி வரும் நபர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, தீ ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வனப்பகுதிகளில் தேங்கியுள்ள சருகுகளை அப்புறப்படுத்தும் பணியை வனத்துறை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். ஏற்காடு மலையில், சுற்றுலா பயணிகள் வந்துச் செல்லும் சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் சருகுகளை அப்புறப்படுத்தி வனத்துறை ஊழியர்களே தீ வைத்து எரித்து வருகின்றனர். யாராவது, தீயை பற்ற வைத்து போட்டுவிட்டால், பெரும் விபத்து நேரிடும் என்பதால் இப்பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதை, குப்பனூர் மலைப்பாதை, கொட்டச்சேடு சாலை, வாணியாறு அரங்கடை காப்புக்காடு பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் சருகுகளை அப்புறப்படுத்தி குவித்து வைத்து தீ வைத்து வருகின்றனர். இந்த பணியை வனச்சரகர் சுப்பிரமணியன் தலைமையிலான வன ஊழியர்கள் 30 பேர் செய்து வருகின்றனர். இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஏற்காடு மலையில் கடந்த ஆண்டு மூங்கில் காடு பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. நடப்பாண்டு கோடையில் எங்கும் காட்டுத் தீ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மிக பாதுகாப்பாக சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் சருகுகளை அப்புறப்படுத்தி தீ வைத்து வருகிறோம். சுற்றுலா பயணிகள், மலைவாழ் மக்கள் வந்துச் செல்லும் அனைத்து சாலைகளிலும் இப்பணியை செய்கிறோம். அதேபோல், காட்டிற்குள் அனுமதியின்றி யாரும் நுழையக்கூடாது. அதை தீவிரமாக கண்காணிக்கிறோம்,’’ என்றனர்.


Tags : fires ,highway roads ,Forest ,Yercaud ,forest fires , Precautionary,measures , prevent, forest fires
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...