×

டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்..:மாநிலங்களவை பிற்பகல் 2 மணி ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2-வது கூட்டம், 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது.  நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் முஸ்லிம்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கிய சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், வடக்கு டெல்லியில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கடந்த 24, 25-ம் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில், கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன. பலரது வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 46 பேர் கொல்லப்பட்டனர், 400 பேர் காயம் அடைந்தனர்.

டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்தும் கடமையில் இருந்து தவறியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்ந்தை சந்தித்து மனு அளித்தனர். டெல்லி கலவரத்துக்கு மத்திய அரசும், டெல்லி அரசும் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது. கலவரம் நடந்த வடக்கு டெல்லியில், ஆய்வு மேற்கொள்ள 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் சோனியா அமைத்துள்ளார். இந்த குழு கலவரம் நடந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் தொடரின் 2-வது கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் டெல்லி கலவரம் பற்றி உடனே விவாதிக்குமாறு குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து நிலைமை சீரானவுடன் விவாதிக்கலாம் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்தார். பின்னர் அமைச்சருடன் பேசி விவாதத்துக்கான தேதியை கூறுவதாக வெங்கையா நாயுடு பதில் கூறி  மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.



Tags : Opposition parties ,Delhi , Opposition ,parties , discuss, Delhi riots
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு