×

மின்மயமாக்கும் பணிகள் முடிந்தது விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே மின்சார இன்ஜின் ரயில் ஓடியது: பயணநேரம் குறைவால் மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம்: மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்ததால் மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே மின்சார இன்ஜின் ரயில் நேற்று முதல் ஓடத்தொடங்கியது. நாடு முழுவதும் ரயில்வே பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில்பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்றது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி, கடந்தமாதம் மயிலாடுதுறையில் இருந்து கடலூர் வரை மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் சோதனை நடத்தப்பட்டது. தென் பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர், திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.கடலூரில் இருந்து மீண்டும் புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை மயிலாடுதுறை வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மார்ச் 1ம் தேதி முதல் 6 ரயில்கள் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்தது.

அதன்படி நேற்று முதல் விழுப்புரத்திலிருந்து - மயிலாடுதுறைக்கு மின்சார இன்ஜின்ரயில் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. விழுப்புரத்தில் காலை 5-55 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறையை சென்றடைந்தது. அதே போல், மயிலாடு
துறையில் இருந்து காலை 5.40 மணிக்கு பயணிகள் ரயில்புறப்பட்டு விழுப்புரத்திற்கு வந்தடைந்தது. விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2,30க்கும், மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3.45க்கும் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், விழுப்புரத்தில் மாலை 5.40 மணிக்கும், மயிலாடுதுறையில் இருந்து மாலை 5.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. மேலும் விழுப்புரத்தில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்படும் காட்பாடி பயணிகள் ரயில், மற்றும் காட்பாடியில் இருந்து அதிகாலை 4.55 மணிக்கு புறப்படும் விழுப்புரம் பயணிகள் ரயில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பயணநேரம் குறைவால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Villupuram ,Mayiladuthurai , Electrification ,completed, Electric engine train runs between Villupuram ,Mayiladuthurai
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...