×

காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக்கு நிதி ஒதுக்கீடு தென்மாவட்ட தாகம் தீர நதிகள் இணைக்கப்படுமா?: குடிநீர், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும்

மதுரை: காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக்கு முதற்கட்ட பணி முடிந்து, 13 ஆண்டுக்குப் பின் தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கி உள்ளது. எனவே, தென்மாவட்ட மக்களின் தாகத்தேவையை தீர்க்க நதிகள் இணைக்கப்படுமா என மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 69 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது. இதில் 33 சதவீதம் பயன்படுத்தப்பட்டு 67 சதவீதம் கடலில் சங்கமமாகிறது. நதிகள் திசை மாறியதன் விளைவாக ஒரு பக்கம் வெள்ளம் சீற்றமெடுத்து நகரமே தண்ணீரில் மிதந்தாலும், மறுபக்கம் வறட்சி கோர தாண்டவம் ஆடுகிறது. இதற்கு நதிநீர் இணைப்பே முக்கிய தீர்வாக உள்ளது. முன்னதாக, நேரு பிரதமராக இருந்தபோது, கங்கை, காவிரி இணைப்பு திட்டம் உருவாகி நின்று போனது.

2002ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய், நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்தார். அதன்படி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, தமிழகத்தில் பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு உள்ளிட்ட 16 நதிகளை இணைக்கும் திட்டமும், கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் கலக்கும் நீரை கிழக்கு நோக்கி திருப்பி தமிழக நதிகளுடன் இணைப்பது போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டப்பணியை தொடங்கி இருந்தால், 2017க்குள் நிறைவேறி இருக்கும். ஆனால் இத்திட்டம் இன்னமும் கானல் நீராகவே நீடிக்கிறது.வெள்ள காலங்களில் காவிரியின் உபரி நீரை, வறண்டு கிடக்கும் வைகை, குண்டாறுக்கு திருப்பும் திட்டத்தை 2007ல் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி உருவாக்கினார். இதன்படி காவிரியில் இருந்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள அக்னியாறு, மணிமுத்தாறு. விருச்சுழியாறு, பாம்பாறு, வைகை, குண்டாறு உள்ளிட்ட 9 ஆறுகளை 255 கிமீ தூரம் கால்வாய் தோண்டி இணைக்க ஆய்வு முடிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.295 கோடிக்கு இத்திட்டத்தை தமிழக அரசு தயாரித்து பணிகளும் தொடங்கின.

அந்த திட்டம் 13 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரத்து 677 கோடியில் நிறைவேற்றப்படும் என அறிவித்து, முதற்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசும் நதிநீர் இணைப்பு திட்டத்தை 2002க்குப்பிறகு மீண்டும் கையில் எடுத்துள்ளது. கோதாவிரி - காவிரி நதி இணைப்புக்கு ரூ.60 ஆயிரத்து 361 கோடியில் வரைவு திட்ட அறிக்கையை தேசிய நீர்மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து 10 நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கோதாவரியில் இருந்து 247 டிஎம்சி நீர் திருப்பி விடப்படும் என தெரிவித்துள்ளது. பிரத்யேக உலோக குழாய் மூலமாக நதிகளை இணைக்க யோசனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் எப்போது தண்ணீர் வந்து தென்மாவட்டங்களின் தாகம் தீர்க்கும் என்பது கனவாக நீடிக்கிறது.

அதேநேரம், தென்மாவட்டங்களுக்கு விரைவாக தாகம் தீர்க்கும் ஆறுகள் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளாவில் பல்வேறு நதிகள் கடலில் பாய்கின்றன. குறிப்பாக பம்பை, அச்சங்கோவிலாறுகளை கிழக்கு நோக்கி திருப்பி, தமிழக வைப்பாற்றுடன் இணைக்க ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. வறண்ட வைப்பாற்றில் தண்ணீர் ஓடினால் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாசனம், குடிநீருக்கு தண்ணீர் கிடைக்கும்.மேற்குத் தொடர்ச்சி மலையில் திருவாங்கூர் மன்னர் தடுப்பணை கட்டி செண்பகவல்லி ஆற்று நீரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு பயனடைய செய்தார். 1952ல் வெள்ளத்தினால் தடுப்பணை சேதமடைந்து, மீண்டும் 1960ல் புதுப்பிக்கப்பட்டது. 1,450 மீட்டர் நீளமுள்ள அந்த தடுப்பணையில் 930 மீட்டர் நீளத்திற்கு திட்டமிட்டு உடைத்து சேதப்படுத்தியதால், தண்ணீர் வரத்து தடைபட்டு நிற்கிறது.

அந்த தடுப்பணையை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியும் கேரளா அனுமதிக்காமல் இழுத்தடிக்கிறது. இதனால் செண்பகவல்லி ஆற்றுநீர் கிடைக்காமல் விருதுநகர் மாவட்டம் சாத்தூர், இருக்கன்குடி மற்றும் சிவகிரி, சங்கரன்கோவில் பகுதிக்கு கிடைக்காமல் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வறண்டு கிடக்கின்றன.ஆங்கிலேயர் ஆட்சியில் பெரியாறு அணை கட்டி முல்லைப்பெரியாறு, வைகை ஆறுகள் இணைக்கப்பட்டன. வைகை அணையில் இருந்து 50 கிமீ தொலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் ஓடும் கல்லாறு கடலில் கலக்கிறது. இதனை வைகையுடன் இணைக்க ஆய்வுகள் முடிக்கப்பட்டும் நிறைவேறவில்லை. எனவே, ‘கேரள ஆறுகள் தமிழகம் நோக்கி, வரும்.... ஆனா.... வராது என்ற நிலையே நீடிக்கிறது. இந்த சூழலில் பாசனம், குடிநீருக்காக தண்ணீரை தேடி மக்கள் அலைகின்றனர். நதிகள் இணையாமல் தண்ணீருக்கு எங்கே போவது? எனவே, இணைப்பதற்கான திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் பேசி நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

இணைப்பு திட்ட நீளம்
கோதாவிரி - காவிரி இணைப்பு நீளம் 1,456 கிமீ. காவிரியில் இருந்து வைகை - குண்டாறு வரை இணைப்பு நீளம் 255 கிமீ. ஆகும். இந்த கால்வாய் அமையும் பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும்.

Tags : South-South Thirsty Tire Rivers ,Cauvery , Funding ,Cauvery , Vaigai, Thunderbolt Connection?
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி