×

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழகத்தில் 11 பகுதிகளில் 4 வழிச்சாலை திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்

சென்னை: வாகனங்களின் எண்ணிக்கை ஏற்ப  தமிழகத்தில் 11 சாலைகளை 2 வழியில் இருந்து 4 வழிச்சாலையாக மாற்றும்  நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை இறங்கியுள்ளது. தமிழக  நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 68 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளன. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளில்  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாததாகி விட்டது. இதனால், சாலைகளில்  குறிப்பிட்ட நேரத்துக்குள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த  பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு  திட்டத்தின் மூலம் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மாநிலத்தில்  முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் முக்கிய சாலைகளை கண்டறிந்து அந்த  சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம்  நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து அந்த சாலைகளை  அகலப்படுத்தும் பணிகளை தொடங்க ஏதுவாக, நிலம் கையகப்படுத்தும் பணிகளை  நெடுஞ்சாலை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி  காஞ்சிபுரம்-வந்தவாசி,  விருத்தாச்சலம்-பரங்கிபேட்டை சாலை,  ராஜபாளையம்-சங்கரன் கோயில்- திருநெல்வேலி சாலை,  பருவக்குடி-கோவில்பட்டி-எட்டயபுரம் சாலை, திருநெல்வேலி- செங்கோட்டை-கொல்லம்  சாலை, நாங்குநேரி-பாரதவரம்-உவரி, கடலூர்-சித்தூர் சாலை, ஆத்தூர்-மல்லியக்கரை சாலை, ஊட்டி-கோத்தகிரி-மேட்டுபாளையம்,  செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-அரக்கோணம்-திருத்தணி சாலை உட்பட 11 சாலைகளை  இரண்டு வழியில் இருந்து நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக சாலைகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.  இப்பணிகள் முடிவடைந்தவுடன் சாலைகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் டெண்டர்  விடப்பட்டு சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

Tags : parts ,Tamil Nadu ,areas , Tamil Nadu, 11 areas, 4 road project, land acquisition, work intensity
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...