×

மாதவரம் ரசாயன ஆயில் கிடங்கில் தீவிபத்து சம்பவம் நெருப்பு, புகையை அணைக்கும் பணி 2ம் நாளாக தொடர்ந்து நடக்கிறது: தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் வாந்தி, கண் எரிச்சலால் அவதி

சென்னை: மாதவரத்தில் ரசாயன ஆயில் தனியார் சேமிப்பு கிடங்கில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தும், தொடர்ந்து ரசாயனம் கலந்த புகை வந்து கொண்டே இருப்பதால் அப்பகுதியே அபாயகரமான பகுதியாக மாறிவிட்டது. தொண்டை எரிச்சல், வாந்தி, கண் எரிச்சல், மயக்கம் என தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இரண்டாவது நாளாக நேற்றும் புகையை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் இறங்கி உள்ளனர். சென்னை, மாதவரம் மேம்பாலம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரசாயன மூலப்பொருள் ஆயில் சேமிப்பு  குடோனில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு திடீரென்று தீப்பற்றியது.

அதை உடனே கவனித்த ஊழியர்கள் பாதுகாப்பாக குடோனில் இருந்து வெளியேறிவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த  மாதவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர் போன்ற பல்வேறு இடங்களின் 26 தீயைணப்பு நிலைய அலுவலர்கள் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் வந்து தண்ணீர், நுரை, கலவை  ஆகியவற்றை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குடோனில் எளிதில் தீப்பற்றக்கூடிய பிளாஸ்டிக், ரசாயனம், ஆயில் பேரல்கள் அதிக அளவில் இருந்ததால் அவை வெடித்து சிதறின. அதில் பறந்த தீப்பொறி பரவி அருகாமையில் ஆசிட் கம்பெனி, மாத்திரை தயாரிக்கும் கம்பெனி,  கிடங்குகள், டிவி, பழைய வாகன உதிரி பாகங்கள், பிரித்தெடுக்கும் பொருட்கள் அடங்கிய சில தனியார் குடோன்களும், சிறு தொழில் நிறுவனங்களுக்கும்  பரவியது.

இதனால் தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஸ்கை லிப்ட் கொண்டு உயரத்திலிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை ஓரளவிற்கு கட்டுப்படுத்தினர். மற்றொரு பக்கம் தீ வேறு கம்பெனிகளுக்கு பரவாமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்து கொண்டே இருந்தனர். தீவிபத்தில் ரசாயனம் கலந்து  புகை சூழ்ந்ததால்  செங்குன்றம் நிலைய அலுவலர் தேவராஜன் மற்றும் பல தீயணைப்பு வீரர்களுக்கும் உதவியாக இருந்த போலீசாருக்கும் வாந்தி, தலை சுற்றல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டது.

மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் பிற நிறுவன ஊழியர்கள் தொண்டை எரிச்சல், மூச்சுவிடுவதில் அவதிப்பட்டனர். இந்நிலையில் 2ம் நாளாக நேற்று காலை தீ மற்றும் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீயின் புகை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்தப் பகுதி முழுவதும் பரவியதால் நேற்று மாலை வரை மேகமூட்டமாக காணப்பட்டது. தீ விபத்துக்கு வெல்டிங் பற்ற வைக்கும்போது தீப்பொறி பரவியதே காரணம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது. மேலும் குடோன் உரிமையாளர், பணியில் இருந்த தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : firefighters ,Chemical Oil Warehouse ,civilians ,Madhavaram , Month, chemical oil warehouse, fire incident, fire, smoke, extinguishing, day 2, firefighters, public vomiting, eye irritation
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...