×

ஜெயின் மெட்டல் குழுமத்தில் நடந்த சோதனையில் போலி கணக்கு மூலம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு: ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை: ஜெயின் மெட்டல் குழுமத்தில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சோதனையில், போலி கணக்கு மூலம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் ரூ.1 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு ஜெயின் மெட்டல் குழுமம் இயங்கி வருகிறது. இந்த குழுமத்திற்கு திருள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரத்தில் இரும்பு, காப்பர் தொழிற்சாலைகள் உள்ளன. இதுதவிர ரியல் எஸ்டேட் தொழிலும் இந்த குழுமம் செய்து வருகிறது. கடந்த நிதி ஆண்டு கணக்கில் ஜெயின் மெட்டல் நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் பல முரண்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 25ம் தேதி ஜெயின் மெட்டல் குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகம், உரிமையாளர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சோதனை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்க பணம் மற்றும் இருவேறு கணக்குகள் மூலம் ரூ.400 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பென்டிரைவ், சொத்துப்பத்திரங்கள், முன் தேதியிட்ட காசோலைகள், கனிணிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயின் மெட்டல் குழுமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து ஓரிரு நாளில் ஜெயின் மெட்டல் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளனர்.

Tags : Jain Metal Group ,tax evasion , Jain Metal Group, Trial, Fake Account, Rs 400 Crore Tax Evasion, Rs 1 Crore Cash
× RELATED ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 42 போலி நிறுவனங்கள்: 3 பேர் கைது