×

காஷ்மீர் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதுதான் ராணுவத்தின் முதல் பணி: ஜெனரல் ராஜூ பேட்டி

ஸ்ரீநகர்: ‘எதிரிகளை கண்காணிப்பதும், காஷ்மீர் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதும்தான் எங்களின் முதல் நோக்கமாக இருக்கும்,’ என 15வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜூ தெரிவித்துள்ளார். ராணுவத்தின் 15வது படைப்பிரிவு புதிய கமாண்டராக லெப்டினென்ட் ஜெனரல் பிஎஸ் ராஜூ பொறுப்பேற்றுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள இவர், ஸ்ரீநகரில் நேற்று அளித்த பேட்டி: ராணுவமானது ஒவ்வொரு குடிமகனுக்கும் நண்பனை போன்றது. எனது ஒவ்வொரு நடவடிக்கையும் இதை பின்பற்றுவது போன்றே அமையும்.

எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் எதிரிகளை கண்காணிப்பதும், காஷ்மீர் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊக்கப்படுத்துவதும் தான் எங்களின் முதல் நோக்கமாக இருக்கும்.காஷ்மீரில் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் கட்டுப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், பிரிவினைவாதத்தை வளர்த்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாகவே  நம்புகிறேன். பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும், அவர்களின் சதி திட்டங்களை முறியடிக்கவும் ராணுவம் தயாராகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Raju ,Army ,Kashmir , first task , Army , uplift , youth of Kashmir
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…