×

அவங்க இருக்கும் கட்சியில் நான் இருக்க மாட்டேன்: நடிகை சுபத்ரா முகர்ஜி ராஜினாமா

கொல்கத்தா: ‘வெறுப்பு உணர்வை தூண்டும் கருத்துக்களை கூறுபவர்கள் கட்சியில், என்னால் நீடிக்க முடியாது,’ என மேற்கு வங்க நடிகை  சுபத்ரா முகர்ஜி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டதுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகின்றது. மற்றொரு பக்கம் ஆதரவு தெரிவித்து சிலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே டெல்லியில் கடந்த வாரம் மோதல் வெடித்தது. இதில், ஏற்பட்ட வன்முறையில்  40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ‘கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது,’ என மேற்கு வங்க சீரியல் நடிகையும் பாஜவை சேர்ந்தவருமான சுபத்ரா முகர்ஜி வெளிப்படையாக கூறியுள்ளார். சுபத்ரா கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு பாஜ.வில் இணைந்தேன். பாஜ.வின் செயல்படும் முறை மற்றும் அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தான் கட்சியில் சேர்ந்தேன். ஆனால், சில காலமாக கட்சி சரியான பாதையில் செல்லவில்லை என்பதை கவனித்து வருகிறேன். மக்களை மதத்தால் தீர்மானிப்பதும், வெறுப்புணர்வை உருவாக்குவதுமே பாஜ.வின் சித்தாந்தமாக மாறி வருவதாக உணர்கிறேன்.

தீவிரமான ஆலோசனைக்கு பின்னரே அந்த கட்சியில் இருந்து விலக முடிவு செய்தேன். டெல்லியில் என்ன நடந்தது என்று அனைவரும் பார்த்தீர்கள். நிறைய மக்கள் கொல்லப்பட்டனர். பல வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பாஜவில் உள்ள அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுக்கத்தக்க கருத்துக்களை கூறி உள்ளனர். இது குறித்து அவர்கள் மீது கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. மோசமாக பேசிய அந்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கட்சியில் நான் இருக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன். அவர்கள் இருக்கும் கட்சியில் நான் இருக்க மாட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைவருக்கு அனுப்பி விட்டேன் என்றார்.

Tags : Subhadra Mukherjee resigns Party ,Subhadra Mukherjee ,party , Party, actress Subhadra Mukherjee resigns
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு மைக்...