×

பீகாரில் பாஜ கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது: நிதிஷ் குமார் உறுதி

பாட்னா: பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக இருப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ ஆகியவை அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவரும், மாநில முதல்வருமான நிதிஷ் குமார், சமீபத்தில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வியை சந்தித்தார். இதனால் அவர் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா என குழப்பம் எழுந்தது.

இந்நிலையில், பாட்னாவில் ேநற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுக்கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்ஆர்சி, என்பிஆர் தொடர்பாகதான் நானும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் சந்தித்தோம். என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே, இது குறித்து குழப்பம் அடைவதற்கு ஒன்றும் இல்லை. அதே நேரம், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது தொடர்பான சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாகதான் இருக்கிறது. இந்த ஆண்டு 243 தொகுதிகளில் நடைபெறும்  சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும். ஐக்கிய ஜனதா தளம் சிறுபான்மையினர் உட்பட அனைத்து பிரிவினரின் நலன் மற்றும் நீதியை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எப்போதும் முன்னெடுக்கும். 1989ம் ஆண்டு பாகல்பூர் கலவரம் நடந்தது. இதில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடந்தபோது யார் அதிகாரத்தில் இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 15 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : alliance ,BJP ,Bihar ,Nitish Kumar ,Baja ,coalition , Bihar, the Baja coalition , united, Nitish Kumar confirmed
× RELATED பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி...