×

தொடர்ந்து ஏற்றிய நிலையில் மானியமில்லா காஸ் விலை குறைப்பு: 55 வரை சரிவு

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஏறிய வண்ணம் இருந்த மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை தற்போது ₹55 வரை குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. மானியமில்லா காஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் எண்ணெய் கம்பெனிகள் நிர்ணயிக்கும். கடந்த பல மாதமாக தொடர்ந்து இந்த காஸ் சிலிண்டர் விலை ஏறுமுகமாகதான் இருந்தது.  மானியமுடன் கூடிய ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்  தீர்ந்த நிலையில், மானியமில்லா சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் பலருக்கும் இதன் விலை ஏற்றம் கவலையை தந்து வந்தது.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை ஆறு முறை தொடர்ந்து ஏறி வந்த மானியமில்லா சிலிண்டர் விலை இந்த மாதம் தான் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை 881 ரூபாயாக இருந்து வருகிறது. நேற்று முதல் 826 ரூபாயாக குறைந்துள்ளது.   சர்வதேச அளவில் பெட்ரோலிய விலைகள்  ஏற்றம் கண்டுள்ளதால் பிப்ரவரியில் காஸ் விலை ஏற்ற வேண்டியதாகி விட்டது. மார்ச் மாதம் குறைக்கப்படும் என்று பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். அதன்படி,  எண்ணெய் நிறுவனங்கள் காஸ் சிலிண்டர் விலையை குறைத்துள்ளன.   கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டர் விலை 145 ரூபாய் உயர்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் மிக அதிகமாக விலை ஏற்றப்பட்டது.  அதன் பின் கடந்த மாதம் தான் அதிக விலை உயர்வு.  கடந்த மாதம் ஏற்றியதில் பாதி அளவுக்கு கூட விலை குறைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

19 கிலோ சிலிண்டர்...
19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை, நாடு முழுவதும் ₹85 முதல் ₹88 வரை குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கடந்த மாதம் வர்த்தக சிலிண்டர் விலை 1,551.50 ஆக இருந்தது. அது தற்போது (மார்ச்) 88 குறைந்து,  1,463.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு மாதம் முழுவதும், இவ்விலையில் தான் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததன் காரணமாக காஸ் சிலிண்டர் விலை  குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் என்ன விலை?
மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை 55 குறைந்து, சென்னையில் 826க்கும், சேலத்தில் 843க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 88 குறைந்து, 1463.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   நடப்பு மாதத்திற்கான (மார்ச்) காஸ் சிலிண்டர் விலை நேற்று காலை நிர்ணயிக்கப்பட்டது. அதில், மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை 55 குறைக்கப்பட்டது. சென்னையில் கடந்த மாதம் 881க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு  மாதம் 55 குறைக்கப்பட்டு, 826 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே சேலத்தில் 898ல் இருந்து, 843 குறைந்துள்ளது. இதேபோல் மற்ற நகரங்களிலும், கடந்த மாத விலையில் இருந்து 55 குறைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

Tags : Subsidiary , continued , Subsidiary ,Cash Price, Decline to 55
× RELATED மருந்து சோதனை ஆய்வகத்தில் இளநிலை...