ஷமி, பூம்ரா அபார பந்துவீச்சு நியூசிலாந்து 235 ரன்னில் சுருண்டது: 2வது இன்னிங்சில் இந்தியா திணறல்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், 7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து திணறி வருகிறது.ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இந்தியா முதல் இன்னிங்சில் 242 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (63 ஓவர்). பிரித்வி, புஜாரா, விஹாரி அரை சதம் அடிக்க,  மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேமிசன் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன் எடுத்திருந்தது. லாதம் 27 ரன், பிளண்டெல் 29 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பிளண்டெல் 30  ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார்.

டெய்லர் 15, லாதம் 52 ரன் (122 பந்து, 5 பவுண்டரி), நிகோல்ஸ் 14 ரன் எடுக்க... வாட்லிங், சவுத்தீ டக் அவுட்டாகி வெளியேறினர். நியூசிலாந்து அணி 50.5 ஓவரில் 153 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் பொறுப்புடன் விளையாடிய கிராண்ட்ஹோம் 26 ரன், நீல் வேக்னர் 21 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இளம் வீரர் ஜேமிசன் 49 ரன் (63 பந்து, 7 பவுண்டரி) விளாசி ஷமி வேகத்தில் பன்ட் வசம் பிடிபட, நியூசிலாந்து அணி முதல்  இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (73.1 ஓவர்).

இந்திய பந்துவீச்சில் ஷமி 4, பூம்ரா 3, ஜடேஜா 2, உமேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது.

மயாங்க் 3, பிரித்வி 14, கோஹ்லி 14, ரகானே 9 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த புஜாரா 24 ரன் எடுத்து (88 பந்து, 2 பவுண்டரி) போல்ட் வேகத்தில் கிளீன் போல்டானார். நைட் வாட்ச்மேனாக வந்த உமேஷ் 1  ரன்னில் பெவிலியன் திரும்பினார்.இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்துள்ளது. விஹாரி 5 ரன், பன்ட் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி வெற்றி பெற்று 1-1 என சமன் செய்யுமா அல்லது நியூசிலாந்து 2-0 என வென்று தொடரை கைப்பற்றுமா என்பது, இன்றைய பரபரப்பான 3வது நாள் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

Related Stories:

>