×

தனிப்பட்ட முறையில் தலிபான் தலைவர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: ‘தலிபான் தலைவர்களை மிக விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்,’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் மீது கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது.  தலிபான்களிடம் இருந்த ஆட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு மக்களாட்சி மலர துணையாக இருந்தது. கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நேட்டோ படைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள அமெரிக்க படைகளை திரும்பப் பெற அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதை அமைதியான முறையில் செய்வதற்காக, தலிபான் தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தார். அதன்படி, கத்தாரின் தோகாவில் அமெரிக்கா - தலிபான் பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தையை நடந்தது. இது வெற்றி  பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் தோகாவில் இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலமாக, கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:தாலிபான் தலைவர்களை தனிப்பட்ட முறையில் மிக விரைவில் சந்திக்க உள்ளேன். என்ன செய்யப் போகிறோம் என அவர்கள் கூறினார்களோ, அதை செய்வார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம். தீவிரவாதிகளை அவர்கள் அழிப்பார்கள். மிக மோசமான சிலரை அவர்கள் கொல்வார்கள். அவர்கள் அந்த சண்டையை  தொடருவார்கள். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதில் ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் வீரர்களை அழைத்து செல்வதற்கான நேரம் இப்போது தான் வந்துள்ளது.

எங்கள் வீரர்களை திரும்ப அழைத்து செல்வதற்கு விரும்புகிறோம். இந்த ஒப்பந்தப்படி,  ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாக குறைக்கப்படும். தற்போது, அங்கு 13 ஆயிரம் அமெரிக்க வீரர்கள்  உள்ளனர்.
இது ஒரு மிக நீண்ட பயணமாகும். ஒவ்வொருவருக்கும் இது கடினமான பயணமாக இருந்தது. சிரியா, ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை 100 சதவீதம் ஒழித்து விட்டோம். ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் நடந்தது போலவே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளோம். ஆனால், இப்போது அந்த பணியை வேறு யாராவது செய்ய வேண்டிய நேரம் இது. அது தலிபான்களாகவும், சுற்றியுள்ள நாடுகளாகவும் இருக்கலாம்.  ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகள் உதவுவதற்கு தயாராக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.  


Tags : leaders ,Trump ,Taliban ,US , personally, Taliban, leaders, Trump ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...