×

கடந்த மாதம் சூறையாடப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி மீண்டும் திறப்பு: அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஜனவரி 26ம் தேதி இரவு சுங்கக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு பஸ் டிரைவருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் டிரைவர், கண்டக்டருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த மற்ற அரசு போக்குவரத்து டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்து, பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து பூத்துகளின் கண்ணாடி, சிசிடிவி கேமரா, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், அங்கு வசூலான 17 லட்சம் பணம் கொள்ளை போனது. இதைத் தொடர்ந்து அந்த சுங்கச்சாவடி இழுத்து மூடப்பட்டது.

கடந்த ஒருமாத காலமாக பரனூர் சுங்கச்சாவடி திறக்கப்படாததால், அவ்வழியே எவ்வித சுங்க கட்டணமின்றி அனைத்து வாகனங்களும் சுலபமாக சென்று வந்தன. இதையடுத்து கடந்த 26ம் தேதி அங்கு மீண்டும் சுங்கச்சாவடியை திறக்க நிர்வாகம் முடிவு செய்தது. எனினும், அங்கு போலீஸ் தரப்பில் பாதுகாப்பு வழங்க முடியாததால் திறப்பு தேதியை தள்ளிவைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் பரனூர் சுங்கச்சாவடி திறக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சுங்கச்சாவடியில் டிஎஸ்பி கந்தன் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடவேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலன் இல்லாதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Incidents ,Paranur Customs Service ,Strong Police Security , Reopening , Paranoor ,Customs Service,
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி