×

சமூக விரோதிகள் குறித்து புகாரளித்த வாலிபர் கைது தலைமை செயலகம் நோக்கி பேரணி

சென்னை: சமூக விரோதிகள் மீது புகார் அளித்தால் கைது செய்யும் வேளச்சேரி போலீசாரை கண்டித்து மண்ணிவாக்கம் கூட் ரோடு பகுதியில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாக வந்தனர். ஓட்டேரி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போக செய்தனர். சென்னை வேளச்சேரியில் பொதுமக்கள் புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி சமூக விரோதிகள் சிலர் பணம் பறித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜாகித் (35) என்ற வாலிபர் சமீபத்தில் அவசர போலீசுக்கு போன் செய்து புகாரளித்துள்ளார். உடனே வேளச்சேரி போலீசார் அங்கு வந்து பொய் புகார் அளித்ததாக கூறி, அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இதனை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நல சங்கம் சார்பில் நேற்று பாதிக்கப்பட்டவருக்கு நீதி கேட்டு மண்ணிவாக்கம் கூட் ரோடு பகுதியில் இருந்து பேரணியாக சென்று தலைமைச்செயலகத்தை முற்றுகையிட வந்தனர்.  

இந்த பேரணியை சங்க தலைவர் வி.எஸ்.லிங்கபெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மண்ணிவாக்கம் கூட்ரோடு பகுதியில் இருந்து பேரணியாக வந்தனர். ஓட்டேரி காவல் நிலையம் அருகே வந்தபோது போலீசார் அங்கு வந்து பேரணியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, ‘‘முறைப்படி அனுமதி வாங்காமல் போராட்டம்  நடத்தினால் கைது செய்வோம். எனவே வண்டலூரில் உள்ள டிஎஸ்பியிடம் சென்று  அனுமதி கேளுங்கள்’’ என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேளச்சேரி பகுதியில் வீடு மற்றும் கடைகளை கட்டுபவர்களிடம் சமூக விரோத கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டுவதும், கொடுக்க மறுத்தால் வரும் வீடு மற்றும் கடைகளை அடித்து நொறுக்குவதும் தொடர்ந்து நடக்கிறது.

இதுகுறித்து அவசர போலீசுக்கு போன் மூலம் தகவல் கொடுப்பவர்களை வேளச்சேரி போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து வருகின்றனர். இதுதொடர்பாக உதவி கமிஷனர் சுப்புராயன், வேளச்சேரி போலீஸ் எஸ்.ஐக்கள் விமல் மற்றும் குபேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே இதனை கண்டித்தும் அவர்கள் மீது காவல் துறை டிஐஜி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக புறப்பட்டு செல்கிறோம்’’ என்றனர்.

Tags : violence Headquarters , Youth arrested ,reporting, anti-social , headquarters
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...