×

அதிமுக கூட்டணியில் கடும் குழப்பம்: மூத்த தலைவர்கள் சீட் கேட்பதால் இழுபறி

சென்னை: மாநிலங்களவை எம்பி சீட் கேட்டு கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் அதிமுக கூட்டணியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக மூத்த தலைவர்கள் பலர் சீட் கேட்டு வருவதால் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என்று அதிமுக ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்அடிப்படையில் கடந்த மாநிலங்களவை எம்பி தேர்தலில் அதிமுக சார்பில்  பாமகவுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அப்போது நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவும், பாமகவுக்கு இணையாக சீட் ஒதுக்க  வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், அப்போது அதிமுக கூடுதல் சீட்  தரவில்லை. அதே நேரத்தில், தேர்தலுக்கு பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று அதிமுக சார்பில் அப்போது தேமுதிகவுக்கு உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர்.

மேலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நாங்கள் சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது. எங்களால் தான் அதிமுக இடைதேர்தலில் வெற்றி பெற முடிந்தது. எனவே, அடுத்து வரக்கூடிய தேர்தலில் உங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் ஒதுக்க வேண்டும். சீட் வழங்காத பட்சத்தில் கடுமையான முடிவை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை  விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாஜவும் சீட் கேட்க ஆரம்பித்து விட்டது.

மாநிலங்களவை எம்பி பதவி வழங்கும் பட்சத்தில், மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்து விடலாம் என்று தமிழக பாஜக கருதுகிறது. குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கினால், மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் கட்சியை வளர்க்க முடியும் என்று தமிழக பாஜக கருதுகிறது. எனவே, மாநிலங்களவை எம்பி சீட் வேண்டுமென்று பாஜகவும் கூறி வருகிறது. அதே நேரத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவை எம்பி சீட் தர வேண்டும் என்று பாஜக மூலம் காய்நகர்த்தி வருகிறார். மேலும் ஜி.கே.வாசன், கூட்டணியில் என்ன பிரச்னை வந்தாலும், நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். எனவே, எம்பி சீட் பெற்று தர வேண்டும். அதிமுகவிடம் தனக்கு எம்பி சீட் கேட்டால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயங்காமல் தருவார்கள் என்றும் பாஜக தலைவர்களிடம் கூறி வருகிறார். இதனால், அதிமுக கூட்டணியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாஜக, தேமுதிக, தமாகா ஒரு பக்கம் நெருக்கடி தரும் நிலையில் அதிமுக மூத்த தலைவர்கள் எம்பி சீட் கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி தருகின்றனர். தம்பித்துரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சீட் கேட்க ஆரம்பித்து விட்டனர். அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிலரும்  தங்களுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். தென்மாவட்டங்களில் உள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் தான் அமைச்சர்கள் உள்ளனர். கடந்த முறை மாநிலங்களவை எம்பி பதவிகளும் அவர்களுக்கு தான் வழங்கப்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, இந்த முறை தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநிலங்களவை எம்பி சீட் வழங்க வேண்டும் என்று தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், யாருக்கு சீட் தர வேண்டும் என்ற குழப்பத்தில் முதல்வர் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில் யாருக்கு எம்பி வழங்கினாலும், அதிருப்தியில் உள்ளவர்கள் வெளியேற வாய்ப்புள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் இருந்து வருகிறார்.

* கட்சி மாற திட்டம்?
கட்சியில் தங்களுக்கு சீட் வழங்காவிட்டால் மாற்றுக்கட்சியில் சேருவது தொடர்பாக, இப்போதே அதிமுகவில் மூத்த தலைவர்கள் சிலர் திமுக, பாஜக கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் பேச தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்பி வேட்பாளர்கள்  அறிவிக்கப்படும் பட்சத்தில் அதிமுகவில் இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : AIADMK ,leaders ,alliance , AIADMK alliance, heavy confusion, senior leaders, seats, tug
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...