×

புயலை கிளப்பும் பட்ஜெட் தொடர் மீண்டும் ஆரம்பம் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: டெல்லி கலவரம் குறித்து பிரச்னை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம், 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது.  நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் முஸ்லிம்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தொடங்கிய சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், வடக்கு டெல்லியில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கடந்த 24, 25ம் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில், கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன. பலரது வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 42 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயம் அடைந்தனர்.

டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்தும் கடமையில் இருந்து தவறியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்ந்தை சந்தித்து மனு அளித்தனர். டெல்லி கலவரத்துக்கு மத்திய அரசும், டெல்லி அரசும் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது. கலவரம் நடந்த வடக்கு டெல்லியில், ஆய்வு மேற்கொள்ள 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் சோனியா அமைத்துள்ளார். இந்த குழு கலவரம் நடந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம், 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கவுள்ளது. டெல்லி வன்முறை பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘‘டெல்லி கலவர பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க இன்று கோரிக்கை விடுப்போம். வன்முறையாளர்களுக்கும், போலீஸ் அதிகாரிகள் ஒரு பிரிவினருக்கும் இடையே தொடர்பு இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் கொடூர கொலை சம்பவம் அரங்கேறி நமது நாட்டின் கவுரவம் உலக அரங்கில் பாதிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் கவலை அளிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என நாங்கள் அவையில் தொடர்ந்து கோரிக்கை விடுப்போம்’’ என்றார்.

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நேற்று சோனியா காந்தி தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். இதில், டெல்லி கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ராஜினாமா செய்ய வலியுறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், எதிர்க்கட்சிகள் எந்த பிரச்ைன கிளப்பினாலும், அதற்கு தகுந்து பதிலளிக்க தயாராக இருக்குமாறு, பாஜ தலைமை, மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதியில் புயல் எழும்பப்போவது நிச்சயம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

* பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது.
* பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம், 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கவுள்ளது.
* டெல்லி கலவர பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க இன்று கோரிக்கை விடுப்போம் என காங்கிரஸ் கூறியுள்ளது.

Tags : Parliament ,Opposition , Storm Club, Budget, Resumption, Parliament, Today, Delhi Riots, Problem, Opposition
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...