×

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக கமலுக்கு போலீசார் சம்மன்: நாளை மறுநாள் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் எற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. ஸ்டுடியோவில் கடந்த 19-ம் தேதி இரவு  நடந்து கொண்டிருந்தபோது, பாரம் தாங்காமல் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த கிரேன் அறுந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படக் குழுவைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது, ஈ.வி.பி. பிலிம் நகரில் பிரமாண்டமாக செட் அமைக்க முறையாக சென்னை மாநகர காவல் துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாதது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி நசரத்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது விசாரணையை தொடங்கினார். பின்னர் கடந்த 24ம் தேதி முறையாக அனுமதி இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்த அதன் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலையில் பயன்படுத்தும் கிரேனை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர். அதன்படி இயக்குநர் ஷங்கர் கடந்த மாதம் 27-ம் தேதி காலை 11.15 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விபத்து குறித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில் விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தயதை அடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை மறுநாள் சென்னை வேப்பரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Kamal ,shooting accident ,Indian2 ,Central Bureau of Investigation , Indian 2 accident, Kamal, policemen summon
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...