×

பழனி பாசஞ்சர் பயணிகளுக்கு மறந்தே போச்சு மாதக்கணக்கில் மாயமாகும் நெல்லை ரயில்கள்: இரட்டை ரயில்பாதை பணிகளால் பயணிகள் திண்டாட்டம்

இரட்டை ரயில் பா தை பணிகளை காரணம் காட்டி நெல்லை ரயில்கள் மாதக்கணக்கில் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் பரிதவிக்கின்றனர். குறிப்பாக பழனி பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டு சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பாலக்காடு வரை செல்லும் பயணிகள் திண்டாட்டத்தில் உள்ளனர். கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான ரயில் வழித்தடத்தில் மதுரைக்கு தெற்கே தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மத்திய அரசின் பட்ஜெட் நிதியை கணக்கில் கொண்டு ஒரு சில இடங்களில் இரட்டை ரயில் பாதை பணிகள் மந்தமாகவும் நடந்து வருகிறது. குறிப்பாக மணியாச்சி தொடங்கி தூத்துக்குடி மற்றும் நெல்ைல மார்க்கத்தில் தற்போது இரட்டை ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதை கணக்கில் காட்டி தெற்கு ரயில்வே நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில்களை மாதக்கணக்கில் ரத்து செய்து வருகிறது.

திருச்செந்தூர்- பழனி பாசஞ்சர் ரயில், நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரயில் இருப்பு பாதை பணிகளை காரணம் காட்டி ஒவ்வொரு 15 தினங்களுக்கும் ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் அறிவித்து வருகிறது. அதிலும் திருச்செந்தூர்- பழனி ரயில் கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட வண்ணமே உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் ரயில் தேவை என்ற அடிப்படையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் திருச்செந்தூரில் இருந்து பழனிக்கு ரயில் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது. இந்த ரயில் பயணிகள் வரவேற்பை பெற்ற நிலையில், மெல்ல மெல்ல பொள்ளாச்சிக்கும், அதை தொடர்ந்து பாலக்காடு வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் இந்த ரயிலில் கேரள மாநிலம் பாலக்காடு வரை எளிதில் சென்று வந்தனர். இந்நிலையில் இரட்டை ரயில் பாதை விருதுநகர் அருகே தொடங்கியபோது இந்த ரயில் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தொடர்ச்சியாக 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் பழனிக்கும், வியாபாரிகள் பொள்ளாச்சிக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதுபோல் நாகர்கோவில்- கோவை பாசஞ்சர் ரயிலும் கடந்த சில மாதங்களாக ரத்து செய்யப்பட்ட வண்ணமே உள்ளது. இந்த ரயிலில் செல்லும் பயணிகள் இரவு நேரத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முண்டியடித்தபடியே செல்கின்றனர். கோவையில் இருந்து பாசஞ்சர் ரயில் சில மாதங்களாக மதுரையோடு திரும்பிச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. இரட்டை ரயில்பாதை பணிகளை காரணம் காட்டி தெற்கு ரயில்வே சில சமயங்களில் திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி, நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா ரயில், நெல்லை- ஈரோடு- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில்களையும் கூட ரத்து செய்து வருகிறது.

இதனால் நெல்லையில் இருந்து செல்லும் பல ரயில்கள் பகல் நேரத்தில் செல்வது உறுதியில்லை என்ற சூழல் உருவாகி வருகிறது. இதனால் பயணிகள் இரவு நேர ரயில்களில் மட்டுமே பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘இரட்டை ரயில் பாதை பணிகளை மேற்கொள்ளுவதில் தெற்கு ரயில்வேயிடம் எவ்வித திட்டமிடலும் இல்லை. நிதி ஒதுக்கீட்டை காரணம் காட்டி மெல்ல மெல்ல பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக நெல்லை மார்க்கத்தில் செல்லும் பல ரயில்களை மாதக்கணக்கில் ரத்து செய்வது பயணிகளை பாதிக்கும். இல்லையெனில் குறிப்பிட்ட ரயில்கள் ரத்து அறிவிப்பையாவது 6 மாதங்கள் அல்லது ஓராண்டு என கூறி அறிவிக்க வேண்டும். அதை விடுத்து 15 தினங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட ரயில்களை மீண்டும், மீண்டும் ரத்து செய்து கொண்டே இருக்கின்றனர்.

திருச்செந்தூர்- பழனி- பாலக்காடு ரயிலை பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, திருச்செந்தூர்- நெல்லை- அம்பை- தென்காசி- சங்கரன்கோவில்- ராஜபாளையம்- விருதுநகர் மார்க்கத்தில் சில மாதங்களுக்கு அனுப்பினால் யாருக்கும் பாதிப்பில்லை. இரட்டை ரயில்பாதை பணிகளையும் பகலில் நடத்திட முடியும். கோவை பாசஞ்சர் சிறிது காலம் மானாமதுரை வழியாக சென்றது. அதுபோல் இப்போது மாற்று மார்க்கத்தில் நாகர்கோவில்- கோவை ரயிலை அனுப்ப முடியும். ஆனால் தெற்கு ரயில்வே பாசஞ்சர் ரயில்களை ரத்து செய்வதிலே குறியாக உள்ளது’’ என்றார்.

Tags : Passenger Travelers ,Palani , Paddy Trains, Twin Railway Works
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து