×

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: தென்னை நார் ஏற்றுமதி 90 சதவீதம் சரிவு: பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

பொள்ளாச்சி: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து சீனாவுக்கு தென்னை நார் ஏற்றுமதி 90 சதவீதம் சரிந்துள்ளது. பல லட்சம் ெதாழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளது. குறிப்பாக, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தென்னை சாகுபடி அதிகம்.  இந்தியா முழுவதும் 18.95 லட்சம் ஹெக்டேர் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. இதில், 16 ஆயிரத்து 940 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், கோவை மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் மட்டும் 80 சதவீதம் தென்னை விவசாயம் உள்ளது.

பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி அதிகம் என்பதால், தென்னை சார்ந்த பொருட்கள்  உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகம் உள்ளன. தேங்காய் மட்டையில் இருந்து நாரை  பிரித்தெடுக்க பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலை மற்றும் அதன்  சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 550க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்  உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் தென்னை நார், தென்னை நார்கட்டி ஆகிய பொருட்களும், மெத்தை, கால்மிதி, விவசாயத்துக்கு பயன்படும் தொட்டிகள், சுவாமி சிலைகள், பொம்மைகள் உள்ளிட்ட 14 வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக,  தென்னை நார், தென்னை நார்கட்டி தயாரிப்புதான் அதிகம். தென்னை நார் பொருட்கள் உற்பத்தியில் பிற மாநிலங்களைவிட தமிழகம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி முதன்மை வகிக்கிறது.

இந்தியாவில் இருந்து சீனா, அமெரிக்கா, கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தென்னை நார் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்த இந்தியாவை குறிப்பிடுகையில், பொள்ளாச்சியில் இருந்து மட்டுமே 70 சதவீத பொருட்கள் ஏற்றுமதியாகிறது. இந்தியாவிடமிருந்து தென்னை நார் இறக்குமதி செய்யும் சீனா உள்ளிட்ட நாடுகள், பொம்மை, நார்மரம், நார் ஆபரணங்கள் போன்ற பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. நம் நாட்டு மூலப்பொருட்களை வாங்கி, அந்நாட்டினர் பெரிய அளவில் வர்த்தகம் செய்கின்றனர். இந்தியாவிடமிருந்து அதிகளவில் தென்னை நார் இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. சீனா மூலம், தென்னை நார் ஏற்றுமதியால் பொள்ளாச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் வருவாய் கிடைக்கிறது.

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.2,800 கோடி அளவில் தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொள்ளாச்சியில் இருந்து மட்டும் ரூ.1,400 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பொள்ளாச்சியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1.30 லட்சம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சீனாவில் கொேரானா வைரஸ் தாக்கம் அந்நாட்டை தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது. அந்நாட்டில், சகஜ நிலை திரும்பாத காரணத்தால், பொள்ளாச்சியில் இருந்து தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி அடியோடு சரிந்துள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் செயல்படும் 550-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், டன் கணக்கில் தென்னை நார் பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.

இதன் காரணமாக, பெரும்பாலான தொழிற்சாலைகள், தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்திவிட்டன. சில ஆலைகளில் மிக குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் ரூ.200 கோடிக்கு அளவுக்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட தென்னை நார் உற்பத்தியாளர் சங்க தலைவர் கவுதமன் கூறியதாவது: பொள்ளாச்சி  பகுதியில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக இருப்பதால், இங்கிருந்து தென்னை  நார் பொருட்கள் டன் கணக்கில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  சீனாவுக்கு மட்டும் 80 சதவீத பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.  மாதம் சராசரியாக 18 ஆயிரம் மெட்ரிக் டன் ஏற்றுமதி நடந்து வந்தது.

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் சுமார் 50 கன்டெய்னர்  லாரிகள் தென்னை நார் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை, தூத்துக்குடி,  கொச்சின் துறைமுகங்களுக்கு செல்வது உண்டு. அங்கிருந்து கப்பல் மூலமாக  வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது, இதில், 90 சதவீத சரிவு  ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு பெருமளவில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.  தற்போது 10-20 சதவீத தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளது.
பொதுவாக ஜனவரி முதல் ஜூன் வரைதான் சீனாவுக்கு அதிகமான ஏற்றுமதி நடைபெறும். தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பால் காரணமாக, ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதம் முழுமையாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். வங்கி கடன் தொகை மற்றும் வட்டி செலுத்தும் காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும்.

சீனாவுக்கு பதிலாக மாற்று நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழி வகை செய்ய வேண்டும். இத்தொழில் தொய்வின்றி நடக்கவும், இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார மண்டலமாக பொள்ளாச்சியை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கவுதமன் கூறினார். பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ‘’தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் வங்கிக்கடன் செலுத்துவதில் உள்ள சிரமம் குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தமிழக அரசு சார்பில், மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

மத்திய  கயிறு வாரிய மண்டல அலுவலர் பூபாலன் கூறுகையில், ‘’சீனாவில் தற்போது கொரோனா  வைரஸ் கட்டுக்குள் இருப்பதாக அறிகிறோம். அடுத்த ஒரு மாதத்தில் சீனா பழைய  நிலைக்கு திரும்பும். அதன்பிறகு வழக்கம்போல் ஏற்றுமதி தொடரும் என  நம்புகிறோம்’’ என்றார்.

தென்னை நார்கட்டி பயன்பாடு என்ன?
பொள்ளாச்சி  மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வெள்ளை மற்றும் பிரவுன் கலரில் 2 வகைகளில் தென்னை நார் துகள் அடங்கிய கட்டி தயாரிக்கப்படுகிறது. இவை,  உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இவை, பயிர் வகைகளுக்கு சிறந்த உரமாக பயன்படுகிறது. காய்கறி  விளைச்சலுக்கு அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி தருகிறது. மண் சரிவை தடுக்க,  மலைப்பிரதேசங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

லாரி வாடகை கட்..!
பொள்ளாச்சி லாரி  உரிமையாளர்கள் கூறுகையில், ‘’பொள்ளாச்சியில் இருந்து கன்டெய்னர் லாரிகளில்  தென்னை நார் பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல, ஒரு லாரிக்கு வாடகை  சராசரியாக ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும். தற்போது ஏற்றுமதி நிறுத்தம்  காரணமாக, லாரி வாடகையும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது,  வட மாநிலங்களுக்கு மிக குறைவான அளவில் லாரிகள் இயக்கப்படுகிறது’’ என்றனர்.

Tags : Corona , Corona virus, coconut fiber, export collapse
× RELATED கோவிஷீல்டு ஆபத்தானதா… உண்மை என்ன?