×

துங்கா நகரமா...தூசிகள் நகரமா?..புராணப்புகழ் மதுரையில் புழுதி பறக்குது: ஆயிரம் கோடியை கொட்டியும் அவதியடையும் மக்கள்

மதுரை: புராணங்களில் இடம் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க நகரம், எந்நேரமும் பரபரப்புக்கு பஞ்சமான ‘தூங்கா நகரம்’ என பெயர் பெற்ற மதுரை, தற்போது திட்டமிடாமல் நடக்கும் பாலப்பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், அரைகுறையாக போடப்பட்ட சாலைகளால் புழுதி பறந்து வருகிறது. ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்து வந்தும், தீராத போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினந்தோறும் அவதியடைவதால் ‘தூங்கா நகரம்’, தூசிகள் நகரமாக மாறி வரும் அவல நிலைதான் உள்ளது.

பார் போற்றும் மதுரை

சுமார் 2600 ஆண்டுகள் தொன்மையும், புராண வரலாற்று சிறப்புமிக்க நகரமாகவும், பகலோ, இரவோ எந்த வேளையிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ‘தூங்கா நகரமாகவும்’ மதுரை திகழ்கிறது. 14ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு தலைநகரமாகவும், 15 முதல் 18ம் நூற்றாண்டு வரை முகலாய மன்னர்கள், நாயக்கமன்னர்கள் ஆட்சியின் தலைநகரமாகவும் திகழ்ந்தது. 18ம் நூற்றாண்டில் ஒரு நாட்டின் தலைநகரமாக இருந்து சரித்திரம் படைத்த வரலாறு இந்தியாவில் மதுரைக்கு மட்டுமே உண்டு.

தமிழர்களின் தாய்மடி

1801ல் ஆங்கிலேயர் ஆட்சியில் தலைநகர் அந்தஸ்தை இழந்தது. ஆனால் பாரம்பரிய தமிழ் கலாச்சார தலைநகரம் என்ற பெருமையை நிலைநாட்டியது. மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக கொண்டு தாமரை இதழ் விரித்தது போன்று வீதிகள். நகரின் மத்தியில் வைகை நதி,  வடக்கே அழகர்மலை, மேற்கில் நாகமலை, தெற்கில் திருப்பரங்குன்றம், பசுமலை என மலை சூழ்ந்து. கிழக்கில் தமிழர்களின் தாய்மடியாக புகழப்படும் ‘கீழடி’ என அற்புதமான வடிவமைப்பை கொண்டது மதுரை. கோயில் மாநகரம், கூடல்மாநகரம், கண்ணகி நீதி கேட்ட நகரம், தூங்காநகரம் என்றெல்லாம் மதுரையை பல பெயர்களில் அழைப்பது உண்டு.  அழகான மாநகரங்களின் வரிசையில் மதுரை இடம் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை பார்த்து, வியந்தவர்கள் இப்போது மதுரைக்கு வந்தால் தலை தெறிக்க ஓடும் நிலைதான் இருக்கிறது. காரணம், போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, தூங்காநகரம் தூசிகள் நகரமாகவே மாறி விட்டது.

நத்தை வேகத்தில் ந.......கரும் பணிகள்...

மதுரை நகருக்குள் 9 ஆயிரம் வீதிகள் உள்ளன. மொத்தம் 1,572 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் இருக்கின்றன. ஆனால், சரியான திட்டமிடல் இல்லாமல், நடந்து வரும் பணிகளால் மதுரையில் எங்கு சென்றாலும் டிராபிக் ஜாம்... டிராபிக் ஜாம்தான்... அதற்கு உதாரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமான முறையில் கட்டப்பட்டு வரும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் பணிகளை குறிப்பிடலாம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பெரியார் பஸ் ஸ்டாண்டை சீரமைப்பு பணிக்காக மூடி 14 மாதமாகிறது. இங்கு ரூ.160 கோடிகளை கொட்டி 2 அண்டர்கிரவுண்ட். 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை கட்டிடம் தரையை தாண்டி உயரவில்லை. பணிகள் ஆமை வேகம் என்பதைவிட நத்தையாக நகர்கிறது. இதை சுற்றிலும் வாகனங்கள் கொளுத்தும் வெயிலில் காத்து நின்று, சிக்னல் கிடைத்த பிறகும் திணறி தான் கடக்க வேண்டும்.

கண்கள் அழுதால்...

ஒருபுறம் நீண்ட நேரம் காத்து கிடக்கும் வாகனங்களில் இருந்து கிளம்பும் கரும்புகை, கட்டுமான பணிகளால் எழும் தூசி என அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களின் கண்களையும், சுவாசத்தையும் பாதிக்கப்பட வைக்கிறது. மேலும், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்காமல், சாலைகளில் பஸ்களை நிறுத்துவதால், மக்கள் நடந்து கூட செல்ல முடியாமல் சாலையெங்கும் பஸ்கள், வாகனங்களால் நிரம்பி கிடக்கின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் செல்லும், மதுரையின் இதயம் போன்ற இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இப்பணி எப்போது முடியும்? இதனால் போக்குவரத்து சிக்கல் தீருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏற்கனவே பெரியார் - ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டுக்கும் நடுவில் (கட்டபொம்மன் சிலைக்கும், திடீர் நகருக்கும் இடையே) மேலவெளிவீதியில் மேம்பாலம் கட்ட திட்டம் உருவாக்கப்பட்டு கைவிடப்பட்டது.  இந்த சூழலில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 429 கடைகள் கட்டப்படுகின்றன. அண்டர்கிரவுண்ட்டில் அமையும் வாகன நிறுத்துமிடத்தில் 371 கார்கள், 4.865 டூவீலர்கள் நிறுத்தப்பட உள்ளது. இதையடுத்து நேதாஜி ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை வரும் என கூறப்படுகிறது. இத்தனை வாகனங்களும், சிட்டி பஸ்களும் அங்கு வந்து செல்லும்போது, தற்போதுள்ள நெருக்கடியைவிட மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. திட்டமிடாமல் நடக்கும் இந்த மறுசீரமைப்பு பணிகளால், மறு(படியும்)சீரமைப்புக்குதள்ளப்படும் என மூத்த பொறியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பறக்கும் பாலம் ‘புஸ்ஸ்ஸ்...’

கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் மொத்தம் 11 சாலைகள், வீதிகள் சந்திக்கின்றன. ஒரு நாளில் சுமார் 4 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. அழகர்கோவில் சாலை, பனகல் சாலையில் சென்டர்மீடியன் அமைத்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தல்லாகுளத்தில் இருந்து வரும்போது 2 முறை சில நேரங்களில் 3 முறை சிக்னல் மாறி தான் கடக்க முடிகிறது. இதனால் கோரிப்பாளையத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் நகர்வதற்கே மூச்சு தள்ளி விடுகிறது. இந்த பிரச்னையை தவிர்க்க பறக்கும், 3 பக்கம் ஏறி இறங்கும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என கடந்த 8 ஆண்டுகளாக  கூறப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் ‘கிணற்றில் போட்ட கல்லாகவே’ இருக்கிறது.

தேவையே இல்லாத பாலம்...

பைபாஸ் சாலை - காளவாசல் சந்திப்பில் ஒரு நாளில் 1.75 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. இதன் குறுக்கே  முதலில் திட்டமிட்டபடி அரசரடி முதல் பி.பி.சாவடி வரை மேம்பாலம் கட்டி இருந்தால் நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டு இருக்கும். அதை மாற்றி பைபாஸ் சாலையிலேயே 750 மீட்டர் தூரத்திற்குள் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இது ‘குண்டுச்சட்டிக்குள் குதிரை’ ஓட்டிய கதையாகத்தான் இருக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது, ஏனென்றால் 750 மீட்டருக்குள் பாலத்தில் ஏறி செல்லும் வாகனங்கள் குறைவாகத்தான் இருக்கும். அரசரடி, தேனி சாலையில் இருந்தோ, ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் செல்லும் வாகனங்களோ பாலத்தில் ஏறி இறங்க வாய்ப்பே இல்லை. மேலும், தேனி சாலை வழியாகத்தான் கம்பம், மூணாறு, குமுளி உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் அதிகளவு சென்று வருகின்றனர்.

ரூ.55 கோடியிலான இந்த பாலம் 20 மாதங்கள் எட்டியும் முடிக்கப்படவில்லை. சாலையெங்கும் சரளை கற்கள் கொட்டி கிடக்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியும், தூசியும் மக்கள் நிம்மதியை கெடுக்கிறது. பைபாஸ் சாலையில் இருந்து ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வரையிலான நெருக்கடியை இந்த பாலம் தீர்க்கும் என்கின்றனர்.  ஆனால், போக்குவரத்து நெருக்கடியே அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன. இப்படி திட்டமிடாமல் நடந்து வரும் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகளால், மதுரை மாநகர மக்கள், தென்மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வருவோர், தினந்தோறும் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். மந்தகதியில் நடக்கும் பணிகளை விரைந்து முடித்து, மதுரையை பொலிவுமிகு நகரமாக உருவாக்க சிறப்புத்திட்டங்களை இனியாவது தீட்ட வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஈகோ பார்க்கும் அதிகாரிகள் இம்சைப்படும் பொதுமக்கள்

மதுரை நகரில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட  பல்வேறு துறை அதிகாரிகள், பொறியாளர்கள் இருக்கின்றனர். நெருக்கடியை குறைத்து, மக்களுக்கு இடையூறு இல்லாமல் திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. ஆனால் முக்கிய துறை அதிகாரிகளிடையே நிலவும் ஈகோ பிரச்னையினால் குளறுபடி ஏற்படுகிறது. உதாரணமாக, பெரியார் பஸ்ஸ்டாண்ட் சீரமைப்பு பணி முடியும் வரை மாற்று இடத்தில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட ஏற்படுத்தி இருக்க முடியும். திருநெல்வேலி ஜங்சன் பஸ் ஸ்டாண்டில் மறு சீரமைப்பு பணி நடக்கிறது. ஆனால் மாற்று இடமாக பொருட்காட்சி திடலில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. மாநகராட்சி அதிகாரியோ, ‘தமுக்கத்தை தர முடியாது’ என்றும், மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி, ‘எல்லீஸ் நகர் இடத்தை தர முடியாது’ என்றும், அரசு போக்குவரத்து கழக அதிகாரி, ‘திடீர்நகர் இடத்தை தர முடியாது’ என்று அனுமதி மறுப்பதால் மக்கள், வாகன ஓட்டிகள்தான் அவதியடைகின்றனர். மறு சீரமைப்பு நடக்கும் பெரியார் பஸ்ஸ்டாண்ட் நடுவில் மேம்பாலம் கட்டுவது யார்? வைகை ஆற்றங்கரையோர சாலையில் பூங்கா அமைப்பது யார்? காண்ட்ராக்ட் விடும் பொறுப்பு யாருக்கு? என்பதில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இடையே மோதல் நடக்கிறது. மேம்பாலம் கட்டுவதற்கு அரசியல் குறுக்கீடுகளால் கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனாலே முக்கிய திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. இதுதான் மதுரைக்கு வந்த மாபெரும் சோதனை.


மெட்ரோ ரயில் வருமா?

மதுரையில் நெருக்கடிக்கு தீர்வு காண சென்னையை போல் மெட்ரோ ரயில் திட்டத்ைத கொண்டு வர வேண்டுமென்பது நிபுணர்களின் பரிந்துரையாகும். இது மதுரை மக்களின் கனவாக நீடிக்கிறது. 2012ல் அறிவிக்கப்பட்டு, மேலூர் முதல் மதுரை நகர் வழியாக திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கலாம் என்று ஆய்வு நடத்தினர். அது வெறும் ஆய்வுடன்  நிற்கிறது.

பலமில்லா பாலங்கள்

மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகே சுப்பிரமணியபுரத்திலுள்ள மேயர் முத்து மேம்பாலம் 1971ல் கட்டப்பட்டது. இதில் 10 டன் எடைக்கு அதிகமான வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 30 கி.மீ.  வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பாலத்தில் எந்த வாகனமும் செல்ல  முடியாத நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. தெற்கு வாசல் ரயில்வே மேம்பாலமும் பராமரிப்பின்றி பலம் இழந்து வருகிறது. வைகை ஆற்றின் குறுக்கே கோரிப்பாளையம் - நெல்பேட்டை இடையே  1889ல் கட்டிய ஏ.வி.மேம்பாலத்தின் வயது 132 ஆகி பராமரித்து பலப்படுத்த தவறுவதால், அதன் ஸ்திரத்தன்மையை இழந்து வருகிறது. இதன் அருகே  கல்பாலம் 1840ல் கட்டப்பட்டது. இது தரைமட்ட பாலமாகும். பாலத்தின் கீழ் அமைந்துள்ள ராட்சத குழாய் வழியாக தண்ணீர் ஓடும். மேல்பகுதியில் வாகனங்கள் செல்லும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாலத்தை மூழ்கடித்து ஓடும். 180 ஆண்டுகளாக வெள்ளத்தை தாங்கி யானை பலத்தில் உள்ளது. இதன் அருகில் தடுப்பணை கட்டியதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்தாலே கல்பாலத்திற்கு மேல் ஏறுகிறது.



Tags : city ,Dunga , The city of Tunga, dust, myth, Madurai
× RELATED திமுக சார்பில் தண்ணீர் பந்தல்