×

தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புச்சுவரை தாண்டி வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரிப்பு: உயரத்தை அதிகரித்தால் அபாயங்களை தவிர்க்கலாம்

சேலம்:தமிழகத்தில் சாலைகளில் நடுவில் உள்ள தடுப்புச்சுவரை தாண்டி, எதிரே வரும் வாகனங்களில் மீது மோதும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்ள 90 சதவீத சாலைகள் இருவழிச்சாலையாக தான் இருந்தது. அதன்பின் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 1994ம் ஆண்டு வாக்கில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக என்.எச்.7 என்ற தேசிய நெடுஞ்சாலை எடுத்துக்கொள்ளப்பட்டது. இருவழிச்சாலையாக இருந்த சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அதன்பின்னர், பல மாநிலங்களில் படிப்படியாக தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது இந்தியாவில் 99 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகள்,  நான்கு வழிச்சாலையாக மாறியுள்ளது.

ஒரு புறம் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், வாகனங்களின் பெருக்கத்தால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையவில்லை. வேகமாக செல்வதற்காக தான் 4 வழிச்சாலை கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமான வேகத்தில் செல்கின்றனர். 4 வழிச்சாலையில் 100 முதல் 120 கிலோ வேகத்தில் கார், வேன், ஆம்னி பஸ்கள் பறக்கின்றன.  இந்த வேகத்தில் செல்லும் வாகனங்கள் இடையில் பாதசாரிகளோ அல்லது வேறு வாகனங்கள் வந்தால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் பெரிய அளவில் விபத்து நடந்து, உயிர்சேதம் அதிகரித்து வருகின்றன.

இந்த வகையில் கடந்த 20ம் தேதி பெங்களூருவில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு கேரளா அரசு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் அவினாசி அருகேயுள்ள ராக்கிபாளையம் என்ற இடத்தில் செல்லும்போது, எதிரே கேரளாவில் இருந்து சேலத்திற்கு டைல்ஸ் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, பஸ் மீது மோதியது. இந்த விபத்து தடுப்புச்சுவரை தாண்டி எதிரே வந்த பஸ்சின் மீது மோதி விபத்துக்குள்ளானது ஆய்வில் தெரியவந்தது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதே நாளில் நேபாள நாட்டின் காத்மாண்டு சுன்சாரி மாவட்டத்ைத சேர்ந்த 34 பேர் ஒரு வேனில் கன்னியாகுமரி என்று சென்றுவிட்டு, அன்று நள்ளிரவு ராஜஸ்தான் செல்ல சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த வேன் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓமலூர் அருகேயுள்ள நரிப்பள்ளம் என்ற இடத்தில் திரும்பும்போது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்து தனியார் ஆம்னி பஸ், வேனில் நடுப்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காயமடைந்துள்ளனர்.

 இதேபோல் 21ம் தேதி இரவு கோவையில் இருந்து ஈரோடு வழியாக சேலம் நோக்கி வந்த கார் ஒன்று தடுப்புச்சுவரை தாண்டி, எதிரே வந்து மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதேபோல் இந்தியாவில் பெரிய அளவில் விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.தேசிய நெடுஞ்சாலைகளில் தொடக்கத்தில் சாலை அமைக்கும்போது நடுவில் இருக்கும் தடுப்புச்சுவர் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு உயர்த்தி அமைக்கப்படுகிறது. நாளடைவில் அந்த சாலை பழுதாகும்போது, அதே சாலையின் மீது மீண்டும் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒன்றரை அடியாக இருந்த தடுப்புச்சுவரின் உயரம் ஒரு அடியாக குறைந்துவிடுகிறது. மீண்டும் அதே சாலையில் மீண்டும் தார்ச்சாலை அமைக்கும்போது தடுப்புச்சுவரின் அளவு மேலும் சுருங்கி விடுகிறது.

இதன் காரணமாக விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் அதே ரோட்டில் நிற்காமல், எதிர் ரோட்டிற்கு சென்று பெரிய அளவில் விபத்துக்களை ஏற்படுத்துக்கின்றன. திருப்பூர், ஈரோட்டில் நடந்த இரு விபத்துக்களுமே தடுப்புச்சுவரை தாண்டி வந்ததால் தான் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உயரம் குறைவாக உள்ள தடுப்புச்சுவரை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறியதாவது: தற்போது இந்தியா முழுவதும் 90 சதவீத தேசிய, மாநில 4 வழிச்சாலைகள் சுமார் 5 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த சாலைகளில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இருமுறை தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக நடுவில் உள்ள தடுப்புச்சுவரின் உயரம் குறைந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்புச்சுவரின் உயரம் அதிகமாக இருக்கும்போது, விபத்து ஏற்பட்டால், வாகனங்கள் தடுப்புச்சுவரை தாண்டாமல் அதே சாலையில் சாய்ந்துவிடும். இதனால் உயிர்சேதம் குறைவாக நடக்கும். அதே இடத்தில் தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருக்கும்போது தான் எதிரே உள்ள ரோட்டிற்கு சென்று பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்துகின்றன.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் 4 வழிச்சாலைகளில் நடுவில் உள்ள தடுப்புச்சுவர் நிர்ணயிக்கப்பட்ட உயரம் இருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வில் உயரம் குறைவாக உள்ள தடுப்புச்சுவரை, அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுத்தாலே விபத்துக்களை குறைக்கலாம். உயிர் சேதத்தை குறைக்க முடியும்.இவ்வாறு சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறினர்.

சாலைகளின் ஓரத்தில் வாகனம் நிறுத்த கூடாது
தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட தூரத்தில் லாரிகள் நிறுத்துமிடம் உள்ளது. ஆனால், சாலையில் செல்லும் லாரி, வாகனங்களை அங்கே நிறுத்தாமல் அவர்கள் இஷ்டத்திற்கு சாலையோரம் நிறுத்திவிட்டு, எவ்வித எச்சரிக்கையும் செய்வதில்லை. இதுபோன்ற வாகனங்கள் சாலையில் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. விபத்துக்களை தடுக்க சாலையோரம் நிறுத்தப்படும் வாகனத்தின் உரிமையாளர் மீது அபராதம் விதிக்க வேண்டும். மேலும் மோட்டார் வாகனச்சட்டத்தின் அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். நெடுஞ்சாலை போலீசார் அவ்வப்போது ரோந்து பணியை தீவிரப்படுத்தி சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும்.



Tags : National Highway Increasing Accident ,vehicle crashes , Vehicles crossing , National Highway, Increasing Accident,Increasing altitude ,risks
× RELATED திருச்சுழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி