×

நம்பிக்கையுடன் விண்ணப்பம் அளித்துதவமிருக்கும் முதியோர்களுக்கு வரமாகுமா உதவித்தொகை

* தகுதியற்றவர்களுக்கு தாராளம்
* பசித்திருப்பவர்களுக்கு கைவிரிக்கும் அவலம்
சேலம்: தமிழகத்தில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வாழவும், வருவாய் ஈட்டி பொருள் சேர்க்க முடியாமலும் முதியவர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். பார்த்து, பார்த்து வளர்த்த தங்களது பிள்ளைகளே, அவர்களை கைவிடும்போது அடுத்த வேளை உணவுக்கே வழியில்லாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்தகைய நபர்களின் துயர்துடைக்கவும், அவர்களின் வயிற்றுக்கு பசியாற்றும் வகையிலும் கடந்த 1962ம் ஆண்டு “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” அமல்படுத்தப்பட்டது.இத்திட்டம் தொடங்கப்பட்டபோது மாதம் ₹20 உதவித்தொகையாக வழங்கப்பட்ட நிலையில், பல்வேறு படிநிலைகளை கடந்து இன்று மாதம் ₹1,000 என உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, இந்திராகாந்தி தேசிய முதியோர், விதவை, ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டமாக, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் சுமார் 29.80 லட்சம் முதியவர்கள், இந்த உதவித்ெதாகையை பெற்று வருகின்றனர்.அடுத்த வேளை உணவுக்கே அல்லாடும் முதியவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது வசதி வாய்ப்புள்ளவர்களுக்கே உரித்தான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக, லட்சம், கோடி மதிப்பிலான வீடு, எண்ணிலடங்கா காலி வீட்டுமனை, ஏக்கர் கணக்கில் விவசாய நிலம், தேவையை மீறிய வங்கி இருப்பு, 24 மணிநேரமும் தாங்கும் வாரிசுகள் என அனைத்தும் உள்ளவர்களுக்கே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற, குறைந்தபட்ச வயதே 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 50ஐ நிறைவு செய்யாதவர்கள் கூட இத்தகைய உதவித்தொகையை பெற்றுவருவது முறைகேட்டின் உச்சம்.

அதேசமயம், தகுதியில்லாதவர்களுக்கு தாராளமாக கிடைக்கும் முதியோர் உதவித்தொகை, அனைத்து தகுதியுடன், வாழவே வழியின்றி தவிப்பவர்களுக்கு கானல் நீராகியுள்ளது. இத்தகைய முறைகேட்டிற்கு காரணம், அந்தந்த பகுதிகளில் உள்ள ஆளும்கட்சி பிரமுகர்கள் என்றால் மிகையல்ல.தமிழகத்தில் புதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் குறைதீர்க்கும் திட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தி மனுக்கள் பெற்றார். இவற்றில், 80 சதவீத மனுக்கள் உதவித்ெதாகைக்காக வழங்கப்பட்டவையாகும். இதன்மூலம் மட்டும், 60 நாட்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆணை பெறப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தகுதியற்றவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது.

அதாவது, அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி பிரமுகர்கள், தகுதி என்ற அடிப்படையை கணக்கில் கொள்ளாமல், தங்களது கட்சியினர் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும், பரிந்துரை கடிதத்துடன் சம்பந்தப்பட்ட தாசில்தார்களுக்கு மனுவை அனுப்பி, முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை பெற்றுத் தந்துள்ளனர். இதற்காக ஒவ்வொருவரிடம் தலா ₹12,500 வரை பணம் பெற்றுக்கொண்டது தான் வேதனையின் உச்சம். அடுத்த வேளை வயிற்று பசிக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் முதியவர்கள், இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு ெசல்வது என தெரியாமல் விழி பிதுங்குகின்றனர். இதனால், உதவித்தொகை பெற தகுதியிருந்தும், அடுத்தவரின் கையை எதிர்பார்க்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை நிறுத்துவதுடன், உரியவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

எத்தனை கேள்வியானாலும் எங்களிடம் பதில் இல்லை...
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட அனுப்பூர் ஊராட்சி, பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் 67 வயதான சக்கரையம்மாள். இவரது கணவர் ராஜூ (69). இவர்களது மகன்கள் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்ட நிலையில், தம்பதியினரின் பெயரில் எந்தவித சொத்தோ, வங்கி இருப்போ எதுவும் இல்லை. இதனையடுத்து, கணவன்-மனைவி இருவரும் அரசின் முதியோர் உதவித்தொகையை பெற கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்த வண்ணம் உள்ளனர். ஆனால், இந்த விண்ணப்பங்களை கண்டுகொள்ளாத வாழப்பாடி தாலுகா அலுவலக அதிகாரிகள், தகுதியற்ற பலருக்கும் உதவித்தொகையை வாரி வழங்கி வருகின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த சக்கரையம்மாள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, அனுப்பூர் ஊராட்சியில் முதியோர் உதவித்தொகை கேட்டு இதுவரை விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர், அதில் தகுதிபெற்றவர்கள் எத்தனை பேர், அதன் மீதான நடவடிக்கை என்ன, தம்பதிகள் நாங்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன, நாங்கள் 5 வருடமாக விண்ணப்பம் அளித்தும், எந்த அதிகாரியும் இதுவரை எங்களிடம் விசாரிக்காதது ஏன், சர்க்கரை மற்றும் இருதய நோயால் அவதியடைந்து வரும் எங்களுக்கு உதவித்தொகை வழங்க மறுப்பது ஏன், கடந்த 19 ஆண்டுகளாக, அனுப்பூர் ஊராட்சியில் உதவித்ெதாகை பெறுபவர்களின் விவரம், உதவித்தொகை பெற கட்டாயம் லஞ்சம் தர வேண்டுமா, அப்படியானால், லஞ்சம் செலுத்த, எந்த அதிகாரியை சந்திக்க வேண்டும் என 10 விவரங்களை கோரினார்.
ஆனால், இவற்றில் ஒரு கேள்விக்கும் தகுந்த பதிலளிக்காத வாழப்பாடி தகவல் ஆணையர், தகவல் கேட்க சட்டத்தில் இடமில்லை, வழங்க இயலாது, அளிக்க முடியாது என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டது. இந்த அலட்சிய பதில் தற்போது நடந்து வரும் முறைகேடுகளை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

யாருக்கெல்லாம் உதவித்தொகை?
தமிழக அரசின் முதியோர் உதவித் தொகையைப் பெற 60 வயதைக் கடந்தவராகவும், மகன், பேரன்கள் அல்லது பராமரிக்க யாரும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், ₹50 ஆயிரத்திற்கும் அதிகமான சொத்துக்களோ, வருமானம் வரக்கூடிய சொத்துக்களோ இருக்க கூடாது.கிடைக்கும் உதவிகள்: வருவாய்த் துறை அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு அவர்களின் பரிந்துரையின் கீழ் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது தவிர 4 கிலோ விலையில்லா அரிசி, பொங்கல், தீபாவளி பண்டிகைகளின்போது விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

உயிர்ப்பலி வாங்கும்
முதியோர் உதவித்ெதாகை
ஆதரவற்று இருப்பவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்காமலும், பெறப்பட்டுவந்த உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதாலும் பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த 85 வயது முதியவர் பெருமாள், 80 வயதான அவரது மனைவி காவேரியம்மாள் ஆகியோர், 5 பிள்ளைகளை பெற்றும் ஆதரவின்றி தவித்தனர். மேற்கொண்டு வாழ்க்கையை நடத்த வழியில்லாமல் தவித்த அவர்கள், கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதேபோல், சேலம் பொன்னமாப்பேட்டையைச் சேர்ந்த ஆதரவற்ற மூதாட்டிக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், வீட்டிலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற பல சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளது.

10 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு உதவித்தொகை
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் இந்த முதியோர் உதவித்தொகை, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2011-2012ம் ஆண்டில் 26,45,537 பேரும், 2012-2013ம் ஆண்டில் 30,76,397 பேரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். ெதாடர்ந்து, கடந்த 2013-2014ம் ஆண்டில் 36,24,063 பேர், 2014-2015 ஆண்டு 31,15,777 பேர், 2015-2016ம் ஆண்டில் 31,65,160 பேர், 2016-2017ம் ஆண்டில் 29,20,030 பேர், 2017-2018ம் ஆண்டு 29,75,885 பேர் மற்றும் கடந்த 2018-2019ம் ஆண்டில் 29.80 லட்சம் பேர் இத்திட்ட பயனாளிகளாக உதவித்தொகை பெற்றுள்ளனர்.

Tags : seniors , Scholarships ,seniors ,applying ,confidence
× RELATED கோவை கல்லூரியில் மீண்டும் ராகிங்: 12...