×

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகரிப்பால் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வத்தலக்குண்டு பஸ்ஸ்டாண்ட்

* ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு
* சாலையிலே இறக்கி விடும் பரிதாப நிலை
வத்தலக்குண்டு : கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகரிப்பால் நெருக்கடியில் வத்தலக்குண்டு பஸ்ஸ்டாண்ட் சிக்கி தவிக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்து வருகின்றனர். பயணிகளை சாலையிலே இறக்கி விடும் பரிதாப நிலை தொடர்கிறது. நெருக்கடியை தவிர்க்க புறநகர் பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், தேனி போன்ற முக்கிய நகரங்களின் மையத்தில் அமைந்துள்ளது. சுற்றுலா நகரங்களான கொடைக்கானல், தேக்கடி, சுருளி, வைகை அணை போன்ற  நகரங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் இந்த பகுதியை கடந்தே செல்ல வேண்டியுள்ளது. மிக முக்கியமாக ‘மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலுக்கு செல்பவர்கள் வத்தலக்குண்டு வழியாகவே அதிகம் செல்கின்றனர்.

மேலும், சபரிமலை, குச்சனூர் சனீஸ்வரன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களுக்கும்,  பக்தர்கள் வாகனங்களில் வருகை தருவது அதிகரித்துள்ளது. கொடைக்கானல் மலையிலிருந்து காரட், முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்றவற்றை வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களும்,  தாண்டிக்குடி மலையிலிருந்து காபி, மிளகு, அன்னாசி, பலா போன்றவற்றை வத்தலக்குண்டு ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களும் வத்தலகுண்டு வழியாகவே சென்று வருகின்றன. வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வரும் 200க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் வத்தலக்குண்டுவை அன்றாடம் கடக்கின்றன.

 குறிப்பாக, கொடைக்கானல் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ‘குட்டி தூங்காநகரம்’ என்று அழைக்கப்படும் வத்தலக்குண்டுவில் இரவு நேரத்திலும் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. இங்குள்ள போக்குவரத்து நெரிசலில் சில நேரம்  ஆம்புலன்சுகளே சிக்கிக் கொண்டு தவித்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. இவ்வழியே செல்லும் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னதாகவே வத்தலக்குண்டு காவல்துறையோடு தொடர்பு கொண்டு, போக்குவரத்து நெரிசலை சீரமைத்து செல்வது தொடர் வழக்கமாக இருந்து வருகிறது. வத்தலக்குண்டு என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல் என்ற நிலை தொடர்கிறது.  சில நேரங்களில் சாலையை கடக்க பொதுமக்கள்  அரை மணி நேரம் வரை காத்து கிடக்க வேண்டிய நிலை இருக்கிறது. போக்குவரத்து நெரிசலால் அவ்வப்போது விபத்துகளுக்கும் பஞ்சமில்லை.   கொடைக்கானல் சீசன் தொடங்கி விட்டால்  போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து சுற்றுலாப்பயணிகளையும் எரிச்சலடைய செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடுகிறது.

வத்தலக்குண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க ஐந்தாண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து காவல்துறை அமைக்கப்பட்டது. அதிலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் சாலை அ.பிரிவிலிருந்து பெரியகுளம் சாலை துணை மின்நிலையம் வரை 6 கி.மீ நீளத்திற்கு தங்கமலையை குடைந்து பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகும் வத்தலக்குண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை. மாறாக நெரிசலும், மக்களுக்கான அவதியும் கூடிக்கொண்டேதான் போகிறது.   வத்தலக்குண்டு போக்குவரத்து நெரிசலுக்கு சாலை ஆக்கிரமிப்பு ஒரு காரணமாக இருந்தாலும் அதைவிட முக்கிய காரணமாக இருப்பது வத்தலக்குண்டு பஸ்நிலையம்தான்.

வத்தலக்குண்டுவில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணியசிவா பெயரில் அமைந்துள்ள  இந்த பஸ்நிலையம் தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆரம்பத்தில் பஸ்கள் நூறுக்கு குறைவாகவே வந்து சென்றன. காலப்போக்கில் 200 பஸ்கள் வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையம் அடிக்கடி நிரம்புவதாலும், சில டிரைவர்கள் பஸ்களை பஸ்நிலையம் முன்புறம் மற்றும் பஸ் நுழையும் இடத்தில் நிறுத்தி  பயணிகளை இறக்கி விடுவதாலும், 10 நிமிடத்திற்கு ஒருமுறை போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.  இதனால் வேலைக்கு செல்பவர்களும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
10 வருடங்களுக்கு முன்பு பஸ்நிலையத்தின் உட்புறத்தில் இருந்த புறக்காவல் நிலையமும் இப்போது இல்லாததால் வாகனங்களை ஒழுங்குபடுத்தி விரைவுபடுத்தி அனுப்ப முடியாத நிலை உள்ளது. சில நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து அரை மணி நேரம் கூட நீடிக்கிறது.  வத்தலக்குண்டு பஸ்நிலையத்தை விரிவுபடுத்த அருகில் இடம் இல்லை.

எனவே தற்போதுள்ள பஸ்நிலையத்தை நகர பேருந்து நிலையமாக வைத்து விட்டு  வெளியூர் செல்லும் பஸ் நிலையத்தை புறநகர் பகுதியில் கொண்டு செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெரியகுளம் சாலையில் சென்றாயப்பெருமாள் கோயில் மலைக்கு கீழ் பகுதியில் 10 ஏக்கருக்கு மேல் அரசு நிலம் உள்ளது.  எனவே  சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு நிலை பேரூராட்சியாக உயர்வு பெற்ற வத்தலக்குண்டு பேரூராட்சி, இவ்விடத்தில் புதிய பஸ்நிலையம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மனுவாக தந்தால் நடவடிக்கை
வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘‘பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற எழுத்துபூர்வமான  கோரிக்கை மனு  வழங்கப்பட்டால், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.வத்தலக்குண்டு போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பரந்தாமன் கூறும்போது, ‘‘வத்தலக்குண்டு பஸ்நிலைய போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதில் தொடர்ந்து போலீசார் கூடுதல் கவனம் காட்டி வருகிறோம். இதற்கு தீர்வு காண, போக்குவரத்து துறை உயரதிகாரிகளிடம் பேசி கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பஸ் ஸ்டாண்ட் முன்பு பயணிகளை இறக்கலாமா?
சமூக ஆர்வலரும், வக்கீலுமான ராஜா கூறும்போது, ‘‘வத்தலக்குண்டு போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் பஸ்நிலையம்தான்.  பஸ் நிலையம் முன்புறமும், பஸ் நுழையும் இடத்திலும் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்தை ஊருக்கு வெளிப்புறத்தில் மாற்றி பைபாஸ் சாலையில் செல்லாமல் தேவையில்லாமல் வத்தலக்குண்டு நகருக்குள் நுழையும் லாரிகள் போன்றவற்றை காவல்துறையினர் கட்டுப்படுத்தினாலே போதும்’’ என்றார்.



Tags : Vattalakundu ,Kodaikanal ,Kodaikanal Vattakkundu Bus Stand to Crisis , Increasing number ,coming ,Kodaikanal, Vattakkundu bus stand ,crisis
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்