×

அதிமுக கூட்டணியில் தேமுதிகவை தொடர்ந்து மாநிலங்களவை சீட் கேட்டு தமிழக பாஜ போர்க்கொடி: இபிஎஸ், ஓபிஎஸ்சை சந்தித்து பேச திட்டம்?

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவை தொடர்ந்து பாஜவும் மாநிலங்களவை சீட் கேட்டு போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளது. விரைவில் பாஜக தலைவர்கள் இபிஎஸ், ஓபிஎஸ்சை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் பாமக 7 தொகுதிகளும், பாஜக 5 இடங்களிலும், தேமுதிக 4, தமாகா ஒரு இடத்திலும் போட்டியிட்டது. அதிமுகவுடனான ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டது. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்பியாக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அதிமுகவில் 3 எம்பி பதவியை யாருக்கு வழங்குவதில் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மூத்த தலைவர்கள் தங்களுக்கு எம்பி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஒரு மாநிலங்களவை பதவியை வழங்க வேண்டும் என்று கூறி வருகிறது. ஒப்பந்தப்படி எங்களுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா போர்க்கொடி தூக்கியுள்ளார். சீட் வழங்காத பட்சத்தில் கடுமையான முடிவை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தேமுதிக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் கூட்டணியில் உள்ள பாஜகவும் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளது. மக்களவை தேர்தலில் கேட்ட தொகுதியை தான் தரவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள எங்களால் தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் இல்லாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் ஆதரவால் தான் தமிழகத்தில் ஆட்சியை இன்னும் நீடித்து வருகிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் கட்சியை வளர்க்கவும், மக்கள் திட்டங்களை எடுத்து ெசல்லும் வகையில் எங்களுக்கும் மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும். தேமுதிகவை விட நாங்கள் விதத்தில் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல. அவர்களே மாநிலங்களை பதவி கேட்கும் போது மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் உள்ள எங்களுக்கு மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். மாநிலங்களை எம்பி பதவி வழங்கும் பட்சத்தில், மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்து விடலாம் என்று தமிழக பாஜக கருதி வருகிறது. குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கினால், அவர் மத்திய அமைச்சராவார் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதனால் அவருக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும் என்று மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜ தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவருக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறு பாஜ தலைவர்களும் மாநிலங்களவை சீட்டை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். எனவே இது தொடர்பாக விரைவில் இபி.எஸ், ஓ.பி.எஸ்.ைஸ சந்தித்து பேச பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். தேமுதிக, பாஜக போர்க்கொடி தூக்கியுள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிமுக திணறி வருகிறது. சீட் வழங்காத பட்சத்தில் கூட்டணியை விட்டு தேமுதிக, பாஜக வெளியேறி விடுமோ? என்ற பயமும் அதிமுகவில் இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அப்படியிருக்கும் போது கூட்டணி கட்சியினர் நிபந்தனை விதிப்பது அதிமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : alliance ,AIADMK ,Rajya Sabha ,BJP , AIADMK Alliance,DMDK , Rajya Sabha, Tamil Nadu Bajala, EPS, OPS
× RELATED `பணத்தை நம்பல, ஜனத்தை நம்புறேன்’...