வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் கோயிலுக்கு சொந்தமான வீடுகளில் இருந்து வெளியேற நோட்டீஸ்: வாடகைதாரர்கள் அதிர்ச்சி

சென்னை: வாடகை பாக்கி வைத்துள்ளோரை கோயிலுக்கு சொந்தமான வீடுகளில் இருந்து வெளியேற சொல்லி அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் ஓட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், மனைகள் உள்ளது. இக்கோயில் கட்டிடங்கள், மனைகளுக்கு வாடகை குறைவாக இருப்பதாக கூறி, வழிகாட்டி மதிப்பை அடிப்படையாக வைத்து கடந்த 2016ல் புதிதாக வாடகை நிர்ணயம் செய்ய அந்தந்த கோயில் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்த்தப்படும் என்று அறநிலையத்துறை கூறியது. ஆனால், கடந்த 2016ல் பெரும்பாலான கோயில்களில் வாடகை நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்தாண்டு புதிய வாடகை அடிப்படையில் பாக்கி தொகையை தருமாறு அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ஒவ்வொருவருக்கும் 2 முதல் 6 லட்சம் வரை பாக்கி தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் மனையில் குடியிருப்போர், திடீரென இவ்வளவு பாக்கி தொகை தருமாறு கோரியதை ஏற்க முடியாது எனக்கூறி விட்டனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டிக்கு கோயில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய உத்தரவு பிறப்பிப்பத்ததாகவும் கூறியிருந்தார். இதனால், கோயில் மனையில் குடியிருப்போர் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிலையில் வாடகை பாக்கி கேட்டு அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு வீடுகளில் நோட்டீஸ் ஓன்றை ஓட்டினர். அந்த நோட்டீஸில், இந்த இடம் அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானதாகவும், கோயிலுக்கு சொந்தமான இடத்தினை வாங்கவோ, விற்கவோ அல்லது ஆக்கிரமிப்பதோ இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959ன்படி சட்ட விரோதமானது. மேற்படி செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இதே போன்று தமிழகம் முழுவதும் வாடகை பாக்கி வைத்துள்ளோரின் வீடுகளில் நோட்டீஸ் ஓட்ட அறநிலையத்துறை முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>