×

வேலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வேட்டை துணை ஆட்சியர் அதிரடி கைது: காரில் துரத்திச் சென்று பிடித்தனர்

* 80 லட்சம் ரொக்கம் சிக்கியது
* பல கோடி சொத்து பத்திரங்கள் பறிமுதல்

வேலூர்: லஞ்சம் வாங்கிய தனித்துணை ஆட்சியரை வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். மேலும் காட்பாடியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ₹80 லட்சம் பணம் மற்றும் பல கோடி மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (31), விவசாயி. இவர்களது முன்னோரின் பூர்வீக விவசாய நிலத்தை கடந்தாண்டு ஆகஸ்ட் 29ம் தேதி தனது பெயருக்கு கிரயம் செய்துள்ளார். இந்நிலையில், நிலத்தை கிரயம் செய்வதற்கான முத்திரைத்தாளை காட்டிலும், அவர் குறைவான கட்டணத்தை செலுத்தியதாக தெரிகிறது. இது குறித்து விசாரிக்க வேலூர், திருவண்ணாமலை தனித்துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) அலுவலகத்துக்கு கடந்த மாதம் 9ம் தேதி கண்ணமங்கலம் சார்பதிவாளர் பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன் (47) என்பவர், ‘உனது நிலத்தின் மதிப்புக்கு 1.25 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், குறைந்த மதிப்பில் பணம் செலுத்தியிருப்பதால் கிரயம் செல்லாது. எனவே, நிலுவை கட்டணத்தை செலுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளார். அதற்கு ரஞ்சித் குமார், ‘நான் விவசாயி, என்னால் உடனடியாக அவ்வளவு பணம் செலுத்த முடியாது. சில நாட்களில் பணத்தை செலுத்தி விடுகிறேன்’ என்று கூறி விட்டு சென்றுள்ளார். இதற்கிடையில், தனித்துணை ஆட்சியர் தினகரன், கடந்த வாரம் மாவட்ட ஆய்வு குழு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  இதனால், ரஞ்சித் குமாரை போனில் தொடர்பு கொண்டு, ‘உடனடியாக 50 ஆயிரம் கொடுத்தால், முத்திரை கட்டணத்தை குறைத்து மதிப்பிடுகிறேன். நான் பணியிட மாறுதலில் செல்வதால், உடனடியாக பணத்துடன் வரவேண்டும். இல்லாவிட்டால், உன்னுடைய கிரயம் கடைசி வரை செல்லாமல் போய்விடும்,’ என்று கூறினாராம்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குமார், இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ₹50 ஆயிரத்தை ரஞ்சித் குமாரிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று முன்தினம் இரவு வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையம் அருகே வந்து பணத்தை கொடுக்கும்படி தனித்துணை ஆட்சியர் தினகரன் கூறியுள்ளார்.  அதன்படி, நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு ரஞ்சித் குமார், தினகரன் கூறிய இடத்திற்கு சென்று காத்திருந்தார். 10 மணியளவில் அங்கு வந்த தினகரன், பணத்தை உடனடியாக வாங்காமல் ரஞ்சித் குமாரை காரில் ஏற்றிக்கொண்டு வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே சென்றுள்ளார். காரை போளூரை சேர்ந்த டிரைவர் ரமேஷ் குமார்(31) ஓட்டினார். காரில் சென்று கொண்டே பணத்தை வாங்கிக்கொண்டு, வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே ரஞ்சித் குமார் இறக்கி விட்டு தினகரன் புறப்பட்டார்.

 அப்போது, அவரை 3 கார்களில் பின்தொடர்ந்து வந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, மைதிலி, எஸ்ஐ தினேஷ் குமார் உட்பட 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தினகரனை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர். ஆனால், யாரோ பின் தொடர்வதை அறிந்து கொண்ட தினகரன், காரில் வேகமாக புறப்பட்டார். அவரை போலீசார் விரட்டிச் சென்று சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே இரவு 10.30 மணியளவில் மடக்கி பிடித்தனர்.
தினகரன் காரில் வைத்திருந்த லஞ்சப் பணம் ₹50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) அலுவலகத்துக்கு தினகரன், கார் டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இதில் ஆவணங்களுக்கு இடையில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ₹1 லட்சத்து 94 ஆயிரத்து 600ஐ பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, தினகரன் மற்றும் ரமேஷ் குமாரிடம் விடிய விடிய நேற்று காலை 7.20 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர்,  இருவரையும் காட்பாடி அருகே தாங்கல் கிராமத்தில் உள்ள தினகரனின் வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.  அந்த வீட்டில் உள்ள பெரிய பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 76 லட்சத்து 64 ஆயிரத்து 600ஐ ரொக்கமாக பறிமுதல் செய்தனர். மேலும் போளூர், ஜமுனாமரத்தூர், காட்பாடி அடுத்த தாங்கல் கிராமம் ஆகிய இடங்களில் தினகரன் வீட்டு மனைகள் வாங்கிக் குவித்து இருந்ததற்கான பல கோடி மதிப்பிலான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரது சொந்த ஊரான போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலும் மற்றொரு லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தினகரன் மற்றும் ரமேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். காரில் துரத்திச் சென்று லஞ்ச ஒழிப்பு அதிகாரியை போலீசார் பிடித்த இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்திரைக் கட்டண தனித்துணை ஆட்சியர்கள் மத்தியில் இது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறுகையில், ‘‘தனித்துணை ஆட்சியர் தினகரன் பலரிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர், இதற்கு முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தினகரன்,  ரமேஷ் குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதன் முடிவில் அனைத்து விவரங்களும் தெரியவரும்,’’ என்றனர்.

2வது லஞ்ச வழக்கு
தற்போது கைதான தனித்துணை ஆட்சியர் தினகரன், கடந்த 2018ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கேபிள் டிவி தாசில்தாராக பணிபுரிந்தார். அப்போது, முறைகேடாக லைசென்ஸ் வழங்குவதற்காக பலரிடம் லஞ்சம் வாங்கி வந்தார். இதற்காக அவருடைய அலுவலகத்தில் சோதனை நடத்திய திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்போது, 2வது முறையாக அவர் லஞ்சம் வாங்கி சிக்கியுள்ளார்.

மாடு விடும்  விழாவுக்கும் வசூல்
லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கியுள்ள தனித்துணை ஆட்சியர் தினகரன், முத்திரை கட்டண விவகாரத்தில் பலரிடம் கறார் வசூலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர் குடியாத்தம் ஆர்டிஓ.வாகவும் கூடுதல் பொறுப்பில் உள்ளார். இதன்மூலம், மாடு விடும் திருவிழா நடத்தும் விழாக்குழுவினரிடம் ₹10 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கியிருப்பதாகவும், பல்வேறு விசாரணைகளில், பலரிடம் லஞ்சம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.  இவர் ேகட்கும் லஞ்சத்தை கொடுத்தால் மட்டுமே, காரியத்தை முடித்து கொடுப்பாராம். தற்போது, விஜிலென்ஸ் போலீசில் சிக்கியுள்ள நிலையில் அவர் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

Tags : Vellore ,Deputy Collector ,Vellore Action , Vellore, Corruption Police, Deputy Collector of Action, arrested
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை