×

விசைப்படகுகளையும் வணிக கப்பல் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் பாரம்பரிய மீனவர்களுக்கு வேட்டுவைக்கும் கடல்மீன் வள மசோதா

நாகர்கோவில்: பாரம்பரிய மீனவர்களுக்கு வேட்டு வைக்கும் கடல் மீன்வள வரைவு மசோதாவுக்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடல்மீன் பிடித்தலை ஒழுங்குபடுத்தும் வகையில் கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) வரைவு மசோதா 2019 கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் உள்ள அம்சங்கள் பெரு நிறுவனங்களுக்கு கடலையும், அதில் உள்ள மீன் வளத்தையும் தாரைவார்க்கும் வகையிலும், பாரம்பரிய மீனவர்களை கடலைவிட்டு வெளியேற்றும் வகையிலும் இடம்பெற்றுள்ளது. பாரம்பரிய மீனவர்கள் கடலில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்று வகை செய்கிறது புதிய மசோதா. பிரத்யேக பொருளாதார மண்டலம் என்று வரையறை செய்யப்பட்டுள்ள 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் 200 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள் உள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்க புதிய மசோதாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஷரத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.  

அதன்படி எல்லா மீன்பிடி படகுகளையும் வணிக கப்பல் சட்டம் 1958ன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.  கப்பல்கள், பாய்மரக்கலன்கள், துரத்து படகுகள், காவல்படகுகள், சரக்கு மற்றும் போக்குவரத்து படகுகள், மீன்வள ஆய்வுகளுக்கு பயன்படுத்தும் படகுகள், மீன்பிடிக்கும் திறன்கொண்ட படகுகள், மீனை சேமிக்கும், பதப்படுத்தும் படகுகள், மீன்பிடி கலனில் இருந்து மீன் மற்றும் எரிபொருட்கள் அல்லது வேறு பொருட்களை மற்றொரு படகில் கொண்டு செல்லும் படகுகள், மீன்பிடி கப்பல்களுக்கு தளவாட பொருட்கள் அல்லது வேறு வகையான உதவிகளை வழங்கும் படகுகளுக்கும் வணிக கப்பல் சட்ட பதிவு கட்டாயம் ஆகிறது. இதன் மூலம் தற்போது ஆழ்கடலில் அந்தந்த மாநில அரசிடம் பதிவு செய்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்ற விசைப்படகுகள், வெளிப்பொருத்து இயந்திரங்களை கொண்ட வள்ளங்கள் மற்றும் கட்டுமரங்கள் மத்திய அரசின் வரையறைக்குள் வந்துவிடுகின்றன.

இவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்க இயலும். பதிவுகளுக்கு என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பது மசோதாவில் விளக்கப்படவில்லை என்பதும் மீனவர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.
இந்த சட்டத்தால், மாநில அரசிடம் இருந்து வந்த விசைப்படகுகள், கட்டுமரங்கள், பைபர் படகுகளுக்கான பதிவுகள் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும்.  அத்துடன் படகுகளுக்கு அனுமதி வழங்குதல், ஆய்வு மேற்கொள்ளுதல், குற்றச்சாட்டு பதிவு செய்தல், அபராதம் விதித்தல், தண்டனை வழங்குதல் உட்பட அனைத்தும் தனியார் அமைப்புகளிடம் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கடலில் தொழிலில் ஆய்வு அமைப்புகளால் படகுகள் சேதம், பாதிக்கப்பட்ட மீனவர்கள் அதிகாரிகளால் பாதிப்புக்கு உள்ளானாலும் அவர்கள் எந்த வித இழப்பீடும் அரசிடம் பெற இயலாது.

விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்குவதில் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சர்வசாதாரணமாக மீன்பிடிக்க செல்ல இயலாத நிலை ஏற்படும். அதே வேளையில் கார்ப்ரேட் நிறுவனங்கள் அரசின் உதவியுடன் நேரடியாக கடல் மீன்வளத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றும் நிலை உருவாகும் என்று இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கின்ற மீனவர்கள் கூறுகின்றனர். எனவே மீன்வள மசோதாவை ஆரம்ப நிலையிலேயே முழுமையாக கைவிட வேண்டும் என்று மீனவர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

‘வணிக கப்பல் சட்டத்தை சாராது இருக்க வேண்டும்’
இது தொடர்பாக நெய்தல் மக்கள் இயக்க தலைவர் பெர்லின் கூறியதாவது:  ஒரு மக்கள் நல சட்டம் எப்படி இருக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த மீன்வள மசோதா ஆகும். இதனை ஒட்டுமொத்தமாக கைவிட்டு மீனவர்களின் பங்களிப்புடன் மீனவர் நலன் சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் ஆலோசனையுடன் புதிய மசோதாவை உருவாக்க வேண்டும்.
*  புதிய மீன்வள சட்டம், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வணிக கப்பல் சட்டத்தை எந்த விதத்திலும் சார்ந்திருக்க கூடாது. மீன்வளம் மற்றும் மீனவர்கள் சார்ந்த அனைத்து சட்டங்களும் மீன் வளத்திற்கான தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் செயல்பட வேண்டும்.
* கப்பல், கனரக விசைப்படகு, வெளிப்பொருத்து இயந்திர விசைப்படகு, வள்ளம், பாய்மரம், கட்டுமரம் என்பனவற்றிற்கான விளக்கங்களை மிக தெளிவாக இந்த மசோதாவில் வரையறை செய்ய வேண்டும்.
* விசைப்படகுகள் இந்த சட்டத்தில் பதிவு செய்யப்படும் அதே வேளையில் படகுகளை பதிவு செய்யவும், அவற்றை சரிபார்த்து தரச்சான்று கொடுக்க கட்டணம் வசூலிக்க கூடாது.
* இந்திய வணிகக் கப்பல்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் எந்த வகை கப்பல்களையும் 50 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குள் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது.
* பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தனியார் மீன்பிடி கப்பல்களுக்கு மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளை உருவாக்க வேண்டும். n தனியார் கப்பல்கள் பிடிக்கும் மீன்கள் வெளிநாட்டு துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. இந்திய கடல் வளங்கள் இந்திய துறைமுகத்திற்கே வந்து சேர வேண்டும்.
*  வெளிநாட்டு கப்பல்களுக்கு பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது.
* மீனவர் படகுகளை சோதனை என்ற பெயரில் தவறான நடவடிக்கைக்கு உட்படுத்தும் அதிகாரிகளுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : fishermen , Spectacles, commercial shipping, fishermen, marine resources bill
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...