×

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் அட்டகாசம் ஊருக்குள் விலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: வெளியில் தலைகாட்ட முடியாமல் பொதுமக்கள் பீதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள்  ஊருக்குள் நடமாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ெபாதுமக்கள் பெரிதும் பீதியில் இருக்க வேண்டியுள்ளது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட பகுதிகள் காடுகளாக உள்ளன. கடந்த 1986 வனச் சட்டத்திற்கு பின், காடுகளை அழிப்பது மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவது முற்றிலும் குறைக்கப்பட்டது. அதன்பின், வனங்களின் பரப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனச்சட்டம் கடுமையாக்கப்பட்ட பின், வேட்டைக்கு செல்பவர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் எரிபொருள் தேவைக்காககூட காட்டிற்குள் செல்வதை தவிர்த்துவிட்டனர்.  இதனால், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புலி, காட்டு மாடுகள், பன்றிகள் உட்பட அனைத்து வன விலங்குகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்டன. பெரும்பாலான காடுகளில் தற்போது வறட்சி காரணமாக போதிய உணவு மற்றும் நீர் கிடைப்பதில்லை. இதனால் வன விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளை முற்றுகையிட துவங்கிவிட்டன.

கரடி கலாட்டா: தற்போது குடியிருப்பு பகுிகளுக்குள் வலம் வரும் கரடிகள் வீடுகளையும், கடைகள், கோயில்களையும் உடைத்து உணவு பொருட்களை சூறையாட துவங்கி விட்டன. ஒரு காலத்தில் காட்டு யானைகள் மட்டுமே இது போன்று வீடுகள், கடைகளை உடைத்து உணவு பொருட்களை சூறையாடி வந்தன.  இதனால், இரவு நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் தஞ்சம் அடையும் இந்த கரடிகள், அங்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை விரட்டுவதும், தாக்குவதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது.  சிறுத்தை அட்டகாசம்: அதேபோல், சிறுத்தைகளும் மக்கள் வாழும் பகுதிகளை முற்றுகையிட்டு அட்டகாசம் செய்கின்றன., ஆடு, மாடு, கோழி, நாய்கள் போன்ற வளர்ப்பு பிராணிகளை தூக்கிச் சென்று விடுகின்றன. இதனால், கிராமப்புறங்களில் உள்ள மக்கள், தேயிலை தோட்டங்களில் வாழும் மக்கள் அந்தி சாய்ந்தால் நடமாட அச்சப்படுகின்றனர்.  இதோடு,  புலிகளும் அவ்வப்போது மக்கள் வாழும் பகுதிகள் அருகே தென்பட துவங்கியுள்ளன.

குரங்கு தொல்லை: மாவட்டம் முழுவதிலும் தற்போது குரங்குகளின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்து அவைகளின் தொல்லைகளும் அதிகமாகிவிட்டது. இவை வீட்டிற்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடி விடுகின்றன. வீட்டிற்கு வெளியே உலர வைக்கும் தானியங்கள், உணவு பொருட்களையும், ஆடைகள் மற்றும் பாத்திரங்களையும் தூக்கிச் சென்று விடுகின்றன. காட்டு மாடுகள், பன்றிகள் உலா: காட்டு மாடுகளோ வளர்ப்பு மாடுகள் போன்று தற்போது மக்கள் வாழும் பகுதியிலேயே உலா வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேயிலை தோட்டம், காய்கறி தோட்டங்களுக்கு வந்து அங்குள்ள விவசாய பயிர்களை துவம்சம் செய்த அவை தற்போது மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்து கழிவுகளை உட்கொள்ள துவங்கிவிட்டன. இவை தற்போது காட்டிற்குள் செல்வதில்லை. மக்கள் வாழும் பகுதிகளிலேேய வலம் வருகின்றன. காட்டு பன்றிகளோ ஒவ்வொரு பகுதிகளிலும் குறைந்த பட்சம் 50 முதல் 100 வரை கூட்டம் கூட்டமாக வலம் வரத்துவங்கிவிட்டன. இவை வீடுகள், ஓட்டல்கள் மற்றும் இறைச்சிக்கடைகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை உட்கொண்டு பழகிவிட்டன. சில சமயங்களில் இந்த காட்டு பன்றிகள் பொதுமக்களை தாக்குவது தற்ேபாது வாடிக்கையாகி விட்டது.  

இப்படி வன விலங்குகளின் தாக்குதலுக்கு பயந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்கள், தேயிைல தோட்ட தொழிலாளர்கள் மாலை 6 மணிக்கெல்லாம் வீட்டிற்குள் முடங்கிவிடுகின்றனர். இரவு நேர மற்றும் அதிகாலை நேர பயணங்கள் போன்றவைகளை தவிர்த்துவிட்டனர். வீட்டின் அருகே உலா வரும் காட்டு யானைகள் பொதுமக்களை தாக்கி கொல்வதும் வாடிக்கையாகி விட்டது. . இதனால், இப்பகுதி மக்கள் காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து விடுபட முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். நெல், வாழை, மரவள்ளி போன்ற பயிர்களையும் பயிர் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஒரு காலத்தில் சர்க்கஸ், விலங்கியல் பூங்கா மற்றும் சரணாலயங்களில் மட்டுமே புலி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டுமாடுகளை காண முடியும். அதேபோல் முதுமலை போன்ற அடர்ந்த வனங்களுக்குள் சென்றால் மட்டுமே இது போன்ற வன விலங்குகளை காண முடியும். அதுவும் சில சமயங்களில் கண்களில் தென்படாது. ஆனால், தற்போது நீலகிரி மாவட்டத்தில் சிங்கத்தை தவிர மற்ற அனைத்து விலங்குகளையும் சாதாரணமாக மக்கள் காண முடிகிறது.

இவைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில், தற்போது எப்போதாவது கேள்விப்படும் மனித-வன விலங்கு மோதல், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நாள்தோறும் கேட்கும் அவலம் ஏற்படும். மேலும், இருத்தரப்பிலும் உயிர் சேதங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக, விலங்குகளை கொல்வதுபோன்ற செயல்கள் அரங்கேற துவங்கும். அதற்கு முன் வனத்துறையினர் மக்கள் வாழும் பகுதிகளுக்கு விலங்குகள் வராமல் தடுப்பது அவசியம்.

காட்டு மாடு, பன்றிகளால் காய்கறி தோட்டமும் பாதிப்பு
காய்கறி தோட்டங்களுக்கு வரும் காட்டு மாடுகள் பட்டாணி, டபுள் பீன்ஸ், அவரை, கேரட் போன்ற பயிர்களை சூறையாடுகின்றன. அதேபோல், பன்றிகள் கேரட், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை துவம்சம் செய்கின்றன. அவ்வப்போது யானைக் கூட்டங்களும் புகுந்து காய்கறி தோட்டம் மற்றும் மேரக்காய் தோட்டங்களை பதம் பார்த்து விடுகின்றன. இதனால், மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கை தீவிரம்
நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். மனித-விலங்கு மோதல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரடி, சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் வனங்களை ஒட்டிய பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பதும், விலங்குகளின் அருகாமையில் செல்லாமல் இருப்பதும் நல்லது என்றார்.  

மேரக்காய் தோட்டங்களாக  மாறிய பழத்தோட்டங்கள்
கடந்த 10 ஆண்டுகள் முன் வரை நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் ஊட்டி ஆப்பிள், பிளம்ஸ், பீச்சிஸ், ஊட்டி ஆப்பிள் போன்ற பழங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டன. கரடி மற்றும் குரங்குகள் தொல்லையால், தற்போது பெரும்பாலான தோட்டங்களில் இருந்த பழ மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. அவைகளை எல்லாம் மேரக்காய் தோட்டங்களாக விவசாயிகள் மாற்றிவிட்டனர். இதனால், ஊட்டிக்கே உரித்தான கமலா ஆரஞ்சு, பேரிக்காய், பிளம்ஸ், பீச்சீஸ் மற்றும் சீதா பழங்கள் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.

கொல்ல வேண்டாம்
வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சாதிக் கூறுகையில்,‘‘நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி காட்டுப் பகுதியாக உள்ளது. இங்கு வேட்டையாடப்படுவது தடுக்கப்பட்டு இருப்பதால்,  விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிர் காடுகளில், சிங்கம் மற்றும் மனிதர்கள் மோதல்கள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பெருகி வரும் வன விலங்குகளுடன் இணக்கமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் வாழும் பகுதிக்கு வரும் விலங்குகளை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளக்கூடாது. விலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்,’’ என்றார்.



Tags : district ,town ,Nilgiri ,The City ,Public panic Animal Movements ,Public Panic , Nilgiris district, animals and civilians
× RELATED நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பீன்ஸ்...