×

போலீஸ் சேனல்: வசூல் ஒழுங்கா வெட்டு... இல்லைன்னா ஓடிடு... அதிகாரி அதிரடி பாலிசி

கோவை புறநகர் பகுதிகளில் போலீசார் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறார்களாம். குறிப்பாக, மதுக்கரைக்கு உட்பட்ட க.க.சாவடி மற்றும் வேலந்தாவளம் என  2 செக்போஸ்ட்களில் பணிபுரியும் போலீசாருக்கு தொடர்ந்து கரன்சி மழை கொட்டுதாம். நிலைய அதிகாரி போட்ட உத்தரவால் வசூலுக்கு ஆளாப்பறக்கின்றனர் இங்குள்ள போலீசார் இந்த செக்போஸ்ட்கள் வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை பார்மாலிட்டிக்கு மட்டும்தான் சோதனை செய்கிறார்களாம். மணல், கருங்கற்கள், புகையிலை பொருட்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை தொட்டுக்கூட பார்ப்பதில்லை. ‘’மிகச்சிறப்பாக’ வழியனுப்பி விடுகின்றனர். இதன்மூலம், மாதம்தோறும் பல லட்சம் குவிகிறது. பங்குத்தொகை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு சரியாக போய் சேரவில்லையென்றால் நடவடிக்கை பாய்கிறது. இதற்கு பயந்து, வசூல் போலீசார் பலர், பணிந்து விடுகின்றனர். ஆனாலும், சிலர் ஆட்டம் காட்டிவிடுகின்றனர். இதனால், கோபத்தில் உள்ள அந்த அதிகாரி, ‘டிரான்ஸ்பர் லிஸ்ட்’ ஒன்றை தயாரித்து வைத்துக்கொண்டு, சென்னைக்கும், கோவைக்கும் விமானத்தில் பறக்கிறார். ஒன்று வசூல் வெட்டு... இல்லையேல் ஓடிவிடு... என்பதுதான் இந்த அதிகாரியின் ஒரே பாலிசி.

அமைச்சர் மகன் பார்களுக்காக ‘அன்பாக பேசும்’ ேபாலீசார்
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி மற்றும் வத்தலக்குண்டு புறநகர் பகுதிகளில், ‘சர்ச்சை புகழ்’ அமைச்சரின் மகன்கள் கட்டுப்பாட்டில் அனுமதியின்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள் இருக்கின்றன. இதனால் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும் அனுமதியின்றி இயங்கும் டாஸ்மாக் கடைகளில் 24 மணிநேரமும் ‘சரக்கு’ விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதனை கண்டித்து மகளிர் அமைப்புகளின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அடுத்தடுத்து நடந்தபோதும், போலீசார் போராட்டக்காரர்களை அழைத்து, அன்பாக பேசி அவசியம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி சமாதானம் செய்து, சாந்தப்படுத்தி அனுப்பும் பணியினை செய்து வருகின்றனர். ‘‘சட்டம், ஒழுங்கை காப்பாற்றி, குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டிய போலீசாரை, சமாதானத் தூதுவர்களாக மாத்திட்டாங்களே...’’ என இப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

எங்கிட்ட பங்கு கேட்டால்  வாயை கட்டிப்புடுவேன் சாபம் போடும் இன்ஸ்.
டெல்டாவில் பழைய துறைமுகம் கொண்ட மாவட்டத்தில் கள்ள சாராயத்திற்கு பெயர் போன கீ பெயரை கொண்ட காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், மணல் கடத்தல் உள்ளிட்டவைகள் பகிரங்கமாகவே நடக்கிறது. இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக கீ காவல் நிலையத்திற்கு முறையாக மாமூல் செல்கிறது.  இதை வசூலிப்பதற்காக அறுபடை வீட்டிற்கு பெயர் பெற்ற கடவுள் பெயரை கொண்ட எஸ்ஐ ஒருவரை இன்ஸ் நியமித்துள்ளார். அந்த எஸ்ஐயும் கச்சிதமாக வசூலித்து கொடுத்து வருகிறார். இதில் ஹைடெக்காக காவல் நிலையத்தில் உள்ள மற்ற போலீசார் தங்களுக்கும் ஒரு பங்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என கூறி நேரிடையாக இன்ஸ்க்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு தடாலடியாக எனக்கு மாந்திரீகம் எல்லாம் தெரியும். மாமூல் கேட்டு வந்தால் வாயை கட்டிப்புடுவேன் என கூறி கண்கள் சிவக்க இன்ஸ் கூறுவதால் அலறி அடித்து காவலர்கள் ஓடுகின்றனர்.

வாயை கட்டுவேன் என கூறினால் பயந்து விடுவோமா என நினைத்த சில காவலர்கள் இன்ஸ் நடவடிக்கையை நோட்டமிட்டனர். இதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் இரவில் யாகம் வளர்த்து பூஜை செய்கிறார். அதே போல் ஒவ்வொரு மாதம் அமாவாசை நாளிலும் சேவல் பலியிட்டு யாகம் வளர்த்து வருகிறார். இவையெல்லாம் எதற்காக என யாரேனும் கேட்டால் எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு என கூறி முற்றுப் புள்ளி வைக்கிறார். இவற்றையெல்லாம் சேகரித்த சக காவலர்கள் பயந்துபோய் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி கொண்டார்களாம்.

காவலருக்கு படியளக்கும் சாமியான எஸ்.எஸ்.ஐ!
குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில், பொது தகவல்அலுவலர் (ஜி.டி.) பொறுப்பில் எஸ்.எஸ்.ஐ. ஒருவர், அந்த காவல் நிலையத்துக்கு படி அளக்கிற சாமியாக இருக்கிறார். இவரது பெயரிலேயே கடவுள் இருக்கிறார் என்பதால் என்னவோ, காவல் நிலைய இன்ஸ். முதல் அனைத்து போலீசாரும், உள்ளே நுழைந்ததும் இவரை பார்த்து விட்டு தான் செல்கிறார்கள். இவர் ஒரே ஆளாக இருந்து ஜி.டி. பொறுப்பை ஏற்று செயல்படுகிறார். எந்த புகார் மனுவை எப்படி விசாரித்தால் என்ன கிடைக்கும் என்பது இவருக்கு அத்துப்படி என்பதால், புகார்தாரர் மட்டுமின்றி எதிர்மனுதாரரையும் மடக்கி வலையில் வீழ்த்தி விடுவார். இன்ஸ். வருவதற்கு முன் வந்தால் பேச்சு, இல்லை என்றால் போச்சு என இவர் கூறுவதை கேட்டு எதிர்மனுதாரர்கள் வந்து கொடுக்க வேண்டியதை எல்லாம் கொடுத்து விடுவர்.

இதனால் அந்த புகார் மனுவை சமரசம் என்ற நிலைக்கு கொண்டு வந்து விடும் ஜி.டி., ஐயா வந்ததும் எல்லா விவரத்தையும் கூறி அவருக்கு சேர வேண்டியதையும் கொடுத்து விடுவார். இதனால் ஜி.டி. சொல்லியாச்சுனா ரைட் என்ற ரீதியில் தான் அவரும் இருக்கிறார். அந்த காவல் நிலைய போலீசாருக்கு மட்டுமின்றி, அருகில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த போலீசாருக்கும் கஷ்ட காலத்துல கடன் கொடுத்து உதவும் கடவுளாக இந்த ஜி.டி. உள்ளார். இரண்டு ஜி.டி.க்கள் உள்ள காவல் நிலையங்களே திணறி வருகிறது. அப்படி இருக்கையில் ஒரே ஆள் எப்படியா? ஜி.டி. பொறுப்பில் இருந்து சமாளிக்கிறார் பாருங்கள் என இவரை பற்றி பேசாத போலீஸ் ஸ்டேஷன் இல்லையாம்.



Tags : Police Channel: Collection of Collection ,Police Channel , Police Channel, Collection
× RELATED போலீஸ் சேனல்