×

ஒரே நாளில் சவரன் 624 குறைந்தது: மேலும் விலை குறைய வாய்ப்பு: நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சி

சென்னை: நேற்று ஒரே நாளில் சவரன் 624 குறைந்தது. வருகிற திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, கடந்த 17ம் தேதி ஒரு சவரன் 31,216க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி 31,408, 19ம் தேதி 31,720, 20ம் தேதி 31,824க்கும், 21ம் தேதி 32,408, 22ம் தேதி 32,576க்கும் விற்பனையானது. 24ம் தேதி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, கிராம் 4,166க்கும், சவரன் 33,328க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது. 25ம் தேதி ஒரு சவரன் 32,736, 26ம் தேதி 32,640, 27ம் தேதி 32,512க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4064க்கும், சவரன் 32,512க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

அதாவது, கிராமுக்கு 78 குறைந்து ஒரு கிராம் 3,986க்கும், சவரனுக்கு 624 குறைந்து ஒரு சவரன் 31,888க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களில் மட்டும் சவரன் 848 அளவுக்கு குறைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மீண்டும் மார்க்கெட் தொடங்கிய பின்னரே மேலும் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரிய வரும்.

இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: கொரோனா வைரஸ்தான் தங்கம் விலை குறைவுக்கு காரணம். கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதில் முதலீடு செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, தங்கம் விலை குறைந்துள்ளது. வருகிற திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன் பிறகே தங்கத்தின் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : buyers ,Jewel , Overnight, shaving, 624 low
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...