×

சினிமா பாடல் காப்புரிமைக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பதா?: நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் வழக்கு: சரக்கு, சேவை வரித்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் உரிமையை பட தயாரிப்பாளருக்கு நிரந்தரமாக காப்புரிமை வழங்கியதற்காக, 1 கோடியே 84 லட்சம் சரக்கு மற்றும் சேவை வரியாக செலுத்தும்படி ஜி.எஸ்.டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இசையமைப்பாளர் ஒருவர் தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கி விட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக 1 கோடியே 84 லட்சம் சேவை வரியாக செலுத்த வேண்டும் என்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) இணை இயக்குனர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாரிப்பாளர்கள்தான். எனவே, இசையமைப்பாளரான தான் ஜிஎஸ்டி கட்டக்கோருவது விதிகளுக்கு முரணானது.

எனவே, ஜி.எஸ்.டி இணை இயக்குனரின் நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். நோட்டீசை  ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : GST ,Composer ,Cinema Song Patent , Cinema Song Patent, GST, Taxation, Composer, Case
× RELATED கிளாம்பாக்கம் புதிய காவல்...