×

வருகிற 11, 12, 13ம் தேதி நடக்கவிருந்த வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்: மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை: வருகிற 11, 12, 13ம் தேதி நடக்கவிருந்த வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கடந்த ஜனவரி 31ம் தேதி, பிப்ரவரி 1ம் தேதி ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் வருகிற 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்திருந்தனர். வங்கி ஊழியர்களின் 3 நாட்கள் ஸ்டிரைக் மற்றும் மார்ச் 14ம் தேதி 2வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை. மறுநாள் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்று வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்ற நிலை உருவானது.

இதனால், வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் மும்பையில் மத்திய அரசு அதிகாரிகள் வங்கி ஊழியர்கள் சங்கத்தினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால், 3 நாட்கள் நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது: வங்கி ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். மீதியுள்ள வங்கி ஊழியர்களின் கோரிக்கை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் உறுதியளித்துள்ளனர். இதனை ஏற்று வருகிற 11, 12, 13ம் தேதி நடக்கவிருந்த ஸ்டிரைக்கை ஒத்தி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bank employees ,strike ,Bank , Bank employees, Strike, withdraw, negotiate
× RELATED இந்தியா 2 வகைகளில் பொருளாதார பின்னடைவை...