×

ஓஎல்எக்ஸ் மூலம் 100 கோடி மோசடி: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

சென்னை: இந்தியாவில் ஓஎல்எக்ஸ் மூலம் லட்சக்கணக்கான நபர்களை மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த  முக்கியமான 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவை சேர்ந்த  தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர். பர்மில் குமார் என்பவர், ஓஎல்எக்ஸ் விற்பனை தளத்தில் மோட்டார் சைக்கிள், கார் போன்றவை விற்பனைக்கு உள்ளதாக தகவல் வெளியிட்டு தமது செல்போன் எண்ணையும் அதில் அளித்திருந்தார். இதை பார்த்து சென்னை மாங்காட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் வாட்ஸ் அப்பில் ராணுவ உடையில் இருப்பது போன்ற படத்தையும் பர்மில் குமார் அனுப்பி உள்ளார். தனது நண்பர் பல்லாவரம் ராணுவ முகாமில் அதிகாரி என்றும், அவர் காஷ்மீருக்கு பணி மாறுதல் ஆகி செல்வதால் பைக்கை விற்பதாக கூறியுள்ளார்.

மேலும் பைக்கிற்கு 60 ஆயிரத்துக்கு பேசி முடித்த பர்மில் குமார் ஆன்லைனில் ₹ 5 ஆயிரம் அனுப்பினால் தான், அடுத்த விபரங்கள் கூற முடியும் என கூறியுள்ளார். இதை நம்பிய இளைஞர் அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த இளைஞர் பணத்தை தருவதை நிறுத்தி விட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது போன்று பல புகார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் இந்த கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மோசடி செய்த கும்பலை தேடி மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீரன் பட பாணியில் ஒரு வாரம் முகாமிட்டு கிராமத்திலிருந்து முக்கியமான இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

அப்போது அவர்களை கைது செய்யவிடாமல் அந்த கிராம மக்கள் தடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன்பிறகு தனிப்படை போலீசார் குற்றவாளிகளான பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் பால் சிங், பச்சு சிங்  இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற இடத்தில் உள்ள துநாவல் கிராமமே வங்கி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. கொள்ளையடித்த பணத்தை கிராமமே பங்கிட்டு சொகுசாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்படி பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் பால் சிங், பச்சு சிங் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வருகின்றனர். ேமலும் ராணுவ அதிகாரி எனக்கூறி ஓஎல்எக்ஸ் மூலமாக பொருட்களை விற்பதாக கூறி 100 கோடிக்கு மேல் இந்தியா முழுவதும் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் மட்டும் நூற்றுக்கணக்கான புகார்களும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று ஓஎல்எக்ஸ் மூலம் பொதுமக்களை ஏமாற்றியதாக ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajasthan ,OLX OLX , OLX, 100 crore fraud, 2 arrested from Rajasthan
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை