×

உபி.யில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு 130 கோடி மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: பிரதமர் மோடி பேச்சு

அலகாபாத்: ‘மத்திய பாஜ அரசுதான் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்ட ஒரே அரசு,’ என ₹19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பிரதமர் மோடி பேசினார்.மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கான நலத்திட்ட உதவியாக மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் பிரமாண்ட விழா, உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து  கொண்டு, 26 ஆயிரம் பயனாளிகளுக்கு ₹19 கோடி மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார். பயனாளிகள், உபகரணங்கள், நலத்திட்ட உதவியின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்த வரையில் நாட்டிலேயே மிகப்பெரிய நலத்திட்ட உதவி வழங்கும்  நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:முன்பெல்லாம் மாற்றுத் திறனாளிகள் ஏதேனும் உதவி பெற அரசு அலுவலக படிகளை வாராக்கணக்கில் ஏற இறங்க வேண்டியிருந்தது. அவர்களின் கஷ்டத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை, காது கொடுத்தும் கேட்கவில்லை. உதவ யாரும்  இல்லாத வகையில் மாற்றுத் திறனாளிகள் கைவிடப்படுவதை நாங்கள் சகிக்க மாட்டோம்.

கடந்த 5 ஆண்டில் இந்த அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக 9 ஆயிரம் மருத்துவ முகாம்களை நடத்தி உள்ளது. இதற்கு முன் இருந்த எந்த அரசும் மாற்றுத் திறனாளிகளை கண்டு கொள்ளவில்லை. கடந்த  ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளின் கஷ்டத்தை போக்கவோ, அவர்களின் பிரச்னைகைளை குறைப்பதை பற்றியோ அரசு யோசிக்கவில்லை. பாஜ.வுக்கு முன் ஆட்சியில் இருந்த அரசின் 5 ஆண்டு காலத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு ₹380  கோடிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாஜ அரசு அதை விட இரண்டரை மடங்கு அதிகமாக ₹900 கோடிக்கு உபகரணங்களை வழங்கி உள்ளது.இந்த உபகரணங்கள் உங்கள் நம்பிக்கையை வலுவாக்க உதவியாக இருக்கும். புதிய இந்தியாவை கட்டமைக்க மாற்றுத்திறனாளி இளைஞர்கள், குழந்தைகளின் பங்களிப்பும் அவசியம் வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் மீது இந்த அரசு  அக்கறை கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டில், நூற்றுக்கணக்கான தெருக்களும், 700க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள், விமான நிலையங்களும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த  துறையிலும் மாற்றுத் திறனாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த உணர்வோடு வேறெந்த அரசும் செயல்பட்டது கிடையாது.  நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது. அனைவரும் அனைத்து பயன்களை  பெற வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

15,000 கோடியில் அமைக்கும் விரைவு சாலைக்கு அடிக்கல்
உபி மாநிலம், சித்ரகூட்டில் பந்தல்காண்ட் விரைவுச்சாலையை  அமைக்கும் பணியை தொடங்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நேற்று நாட்டினார். 296 கிமீ தொலைவுக்கு ₹14,849 கோடி செலவில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இது,  பந்தல்கண்டில் இருந்து ஆக்ரா-லக்னோ  மற்றும் யமுனா விரைவுச்சாலைகள் வழியாக தலைநகர் டெல்லியை இணைக்கிறது. உபி.யின் ராணுவ தளவாட உற்பத்தி மையத்திற்காக இச்சாலை அமைக்கப்படுகிறது என மோடி தெரிவித்தார்.

Tags : Modi ,government ,events ,UP ,state , Participation. justice. Prime Minister. Modi talk
× RELATED மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்;...