×

பிரித்வி, புஜாரா, விஹாரி அரை சதம் இந்தியா 242 ரன்னில் ஆல் அவுட்: ஜேமிசன் 5 விக்கெட் வீழ்த்தினார்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் ஸ்பின்னர் அஜாஸ் பட்டேலுக்கு பதிலாக வேகப்  பந்துவீச்சாளர் நீல் வேக்னர் இடம் பெற்றார். இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, ஆல் ரவுண்டர் ஜடேஜா சேர்க்கப்பட்டார். காயம் காரணமாக விலகிய இஷாந்துக்கு பதிலாக உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.இந்திய அணி தொடக்க வீரர்களாக பிரித்வி, மயாங்க் களமிறங்கினர். மயாங்க் 7 ரன் மட்டுமே எடுத்து போல்ட் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து பிரித்வியுடன் புஜாரா இணைந்தார். அதிரடியாக விளையாடிய பிரித்வி 61 பந்தில் அரை  சதம் அடித்தார். பிரித்வி - புஜாரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது.

பிரித்வி 54 ரன் (64 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜேமிசன் வேகத்தில் லாதம் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி 15 பந்தில் 3 ரன் எடுத்து சவுத்தீ வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி ஏமாற்றமளித்தார். கடைசியாக விளையாடிய  5 சர்வதேச இன்னிங்சில் கோஹ்லியின் ரன் குவிப்பு 3, 19, 2, 9, 15... என மிக மோசமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ரகானே 7 ரன் எடுத்து சவுத்தீ பந்துவீச்சில் டெய்லர் வசம் பிடிபட, இந்தியா 32.1 ஓவரில் 113 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், புஜாரா - ஹனுமா விஹாரி இணைந்து 5வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர். விஹாரி  55 ரன் (70 பந்து, 10 பவுண்டரி), புஜாரா 54 ரன் (140 பந்து, 6 பவுண்டரி) எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.
ரிஷப் பன்ட் 12 ரன் எடுத்து ஜேமிசன் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். உமேஷ் யாதவ் டக் அவுட்டாகி வெளியேற, ஜடேஜா 9 ரன், முகமது ஷமி 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

இந்தியா 63 ஓவரில் 242 ரன் எடுத்து ஆல்  அவுட்டானது. பூம்ரா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் ஜேமிசன் 14 ஓவரில் 3 மெய்டன் உட்பட 45 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். சவுத்தீ, போல்ட் தலா 2, வேக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து  முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன் எடுத்துள்ளது. லாதம் 27 ரன், பிளண்டெல் 29 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : Prithvi ,India ,Vihari ,Pujara ,Jamieson , Prithvi, Pujara, Vihari, half-centuries,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...