×

நீதிபதி முரளிதர் இடமாற்றத்தில் கவனமாக இருந்திருக்க வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: ‘‘டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதருக்கு நள்ளிரவில் இடமாற்ற உத்தரவு வழங்கியபோது, அரசு சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும்’’ என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் கருத்து  தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்கு வழக்கு பதிவு செய்யாத டெல்லி போலீசாருக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் கடந்த மாதம் 26ம் தேதி கண்டனம் தெரிவித்தார். அன்று இரவு அவர் பஞ்சாப் மற்றும்  அரியானா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் சர்ச்சையானது. பா.ஜ அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இது குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு ‘‘இந்த  இடமாற்றம்  உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. இந்த இடமாற்றத்துக்கு நீதிபதி முரளிதர் ஏற்கனவே தனது ஒப்புதலை தெரிவித்து விட்டார்’’ என கூறியது.

இது குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் கூறுகையில் , ‘‘நீதிபதி பிறப்பித்த உத்தரவும், இடமாற்றுதலுக்கான இறுதி அறிவிப்பும் ஒரே தேதியில் வெளியானதும் ஏதேச்சையாக நடந்துவிட்டது. இந்த  உத்தரவுக்கும், இடமாற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நிலைமை மோசமாகவும், மீடியாக்கள் விழிப்புடன் இருக்கும்போது, நள்ளிரவில் இடமாற்றம் உத்தரவு பிறப்பிக்கும் விஷயத்தில் அரசு சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும்.  இல்லையென்றால், மக்கள் வேறுமாதிரியாக நினைக்க வாய்ப்பு ஏற்படும். இதை அவர்கள் வேறுமாதிரியாகத்தான் கூறுவர்’’ என்றார்.



Tags : Muralidhar ,Chief Justice Opinion ,Muralidhar Must Have Careful: Former ,Judge , transfer ,Judge Muralidhar,Former, Chief Justice opinion
× RELATED சொத்து குவிப்பு வழக்கில் விடுவிப்பு...