×

கன்னையா குமார் விவகாரம் தேச துரோக சட்டத்தை டெல்லி அரசும் புரிந்து கொள்ளவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீது தேசத் துரோக வழக்கு தொடர, டெல்லி அரசு அனுமதித்து உள்ளதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவின் நினைவு தின நிகழ்ச்சி, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசத் துரோக கோஷங்கள் எழுப்பியதாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உட்பட சிலர் மீது கடந்தாண்டு குற்றப்  பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இவர்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடர்வதற்கான அனுமதியை டெல்லி அரசு குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, ஓராண்டுக்குப் பிறகு கடந்த மாதம் 20ம் தேதி இந்த  அனுமதியை டெல்லி அரசு வழங்கியது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  ‘கன்னையா குமார் உட்படசிலர் மீது ஐபிசி 124ஏ மற்றும் 120பி பிரிவின் கீழ் வழக்கு தொடர அனுமதி  அளித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. தேசத் துரோக சட்டத்தை மத்திய அரசு போல், டெல்லி அரசும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.’ என கூறியுள்ளார்.



Tags : New Delhi ,Delhi ,government ,Kannaya Kumar ,P. Chidambaram , Kannaya Kumar , Treason law, Delhi government, P. Chidambaram ,allegation
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...