×

மூதாட்டி மரணத்தில் திடீர் திருப்பம் நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு உறவினரே கொன்றது அம்பலம்: சிறுவன் உட்பட 2 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி காந்திபுரம் திடீர் நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). கணவர் இறந்து விட்டதால், தனது மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி, சாந்தி வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்கு  சென்றுள்ளனர். வள்ளியம்மாள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலையில் அனைவரும் வீடு திரும்பியபோது, வள்ளியம்மாள் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, வீட்டில் சோதனை செய்தபோது, பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ₹5 லட்சம் மாயமானது தெரிந்தது. இதையடுத்து, வள்ளியம்மாளின்  பேரன் சுரேஷ், வியாசர்பாடிகாவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எங்களது பாட்டி மர்மமான முறையில் இறந்துள்ளார். வீட்டில் இருந்த நகை, பணமும் மாயமாகி உள்ளது. எனவே, அவர் இறப்பில் சந்தேகம் உள்ளது, என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து,  குடும்பத்தினரிடம் விசாரித்தனர்.அப்போது, வள்ளியம்மாளின் பேத்தி மஞ்சு என்பவரின் கணவர் கார்த்திக் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர், சமீபத்தில் ₹70 ஆயிரம் மதிப்புள்ள புதிய பைக் வாங்கியது போலீசாருக்கு சந்தேகத்தை  ஏற்படுத்தியது.  அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தபோது, வள்ளியம்மாளை ெகான்று, நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியது: சம்பவத்தன்று கொருக்குபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன், எனது மாமியார் வீட்டிற்கு சென்றேன். அங்கு வள்ளியம்மாள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். இதை பயன்படுத்தி, பீரோவை திறந்து அதில் இருந்த நகை,  பணத்தை திருடினேன்.  சத்தம் கேட்டு எழுந்த வள்ளியம்மாள், எங்களை கையும் களவுமாக பிடித்துவிட்டார். இதனால், வீட்டில் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில், வள்ளியம்மாளை கீழே தள்ளி, தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தோம்.  பின்னர், அவர் தவறி விழுந்து இறந்தது போன்று சடலத்தை போட்டுவிட்டு தப்பினோம். என தெரிவித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புதிய பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர், கார்த்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை  கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.




Tags : death ,children ,jeweler , death , elder, Jewelry, coveted ,money,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...