×

எண்ணெய் கிணறுகள் வெளியேறக்கோரி டெல்டா மாவட்டங்களில் 4ம்தேதி ஆர்ப்பாட்டம்

தஞ்சை: டெல்டா மாவட்ட தாலுகா தலைநகரங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4ம் தேதி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூ) மாநில குழு கூட்டம் நேற்று ஏஐடியூசி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநில தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் அளித்த பேட்டி: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததை வரவேற்கிறோம். கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் விடுபட்டுள்ள வேளாண் பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்  இணைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

மக்கள் விரோத இத்தகைய திட்டங்களை அனுமதிக்க கூடாது. ஏற்கனவே உள்ள திட்டங்களை ரத்து செய்யவேண்டும். இதற்காக உருவாக்கப்பட உள்ள குழுவில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை இணைக்க வேண்டும். டெல்டாவில் உள்ள எண்ணெய் கிணறுகள் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 4ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், கரூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்ட   தாலுகா தலைநகரங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Protests ,demonstration ,oil wells ,Delta Districts 4 ,Delta Districts 4 MYTHY , Oil wells, Delta Districts, demonstration
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...