×

கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 114 கனஅடியாக உள்ள நிலையில், ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 400 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கடந்த சில மாதங்களாகவே ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக சரிந்தது. கடந்த 1ம் தேதி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 53 கனஅடியாக இருந்த நிலையில், நீர்மட்டம் 107.30 அடியாக இருந்தது. படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 105.26 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 105.20 அடியானது.

அதேவேளையில், நேற்று முன்தினம் விநாடிக்கு 102 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 114 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நீர் இருப்பு 71.74 டிஎம்சி. அதேசமயம் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 400 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று காலை  9 மணியளவில் நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரித்தது.
இதுகுறித்து பிலிகுண்டுலு மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக 400 கனஅடியாக நீடித்த நீர்வரத்து இன்று (நேற்று) காலை 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆனால், கர்நாடக அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான தண்ணீர் திறப்பா? என்று அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை,’ என்றனர்.

தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கு வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி தண்ணீரை இப்போதுதான் கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு இன்னும் ஓரிரு தினங்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத தவணையாக தமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதன்படி, கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த அணை 124.80 அடி உயரம் கொண்டதாகும். நேற்று காலை நிலவரப்படி, அணையில் 112.57 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 314 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 5,885 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு 2,885 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags : Karnataka Dam ,Oakenakkal Karnataka Dam ,waterway ,water opening , Karnataka Dam, water opening, waterway, 2,000 cubic feet, increase
× RELATED 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி...