×

திருவண்ணாமலை அடுத்த கவுத்திமலை பகுதியில் மான்வேட்டையை தடுத்த வனக்காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு: படுகாயங்களுடன் சிகிச்சை; இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மான்களை வேட்டையாட முயன்றவர்களை விரட்டி பிடித்தபோது, 2 வனக்காவலர்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை அடுத்த கவுத்திமலை காப்புக்காட்டில், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை சரக வன காவலர்கள் ராஜேஷ், சேகர், சம்பத் பாலாஜி உள்ளிட்டோர் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கவுத்திமலை வேடியப்பன் கோயில் அருகே, இரண்டு பேர் நாட்டுத் துப்பாக்கியுடன் பைக்கில் தப்பியோட முயன்றனர். அவர்களைப் பார்த்ததும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக்காவலர்கள் விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர்.

அப்போது, திடீரென பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த நபர், நாட்டுத் துப்பாக்கியால் வனக்காவலர்கள் மீது சரமாரியாக சுட்டார். அதில், சம்பத்(56), பாலாஜி(24) ஆகியோர் மீது துப்பாக்கி ரவைகள் பாய்ந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் விரட்டினர். இதனால் அந்த இரண்டு நபர்களும், தடுப்பு கற்கள் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, இருவரையும் பிடித்த வனத்துறையினர், திருவண்ணாமலை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் கலசபாக்கம் தாலுகா மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(29), காந்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன்(22) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அனுமதியில்லாத நாட்டுத்துப்பாக்கி மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த வனக்காவலர்கள் சம்பத், பாலாஜி ஆகியோரும், கீேழ விழுந்து காயம் அடைந்த இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Gunmen ,Thiruvannamalai ,Mannar Two ,shootings ,Gowthimalai , Thiruvannamalai, Gowthimalai area, forest guards, shootings
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...