×

தனியார் ஆயில் கிடங்கில் பயங்கர தீ விபத்து: மாதவரத்தில் பரபரப்பு

சென்னை: மாதவரத்தில் தனியார் சேமிப்பு கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் பலகோடி ரூபாய் பொருட்கள் நாசமானது. மாதவரம் மேம்பாலம் அருகே தனியாருக்கு சொந்தமான சேமிப்பு குடோன் உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ரசாயன மூலப் பொருட்கள் மற்றும் ஆயில் போன்ற ஏராளமானவை சேமித்து வைத்து பின்னர் உரிமையாளர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று மாலை 3 மணியளவில் இந்த குடோனில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென்று பரவியதால் உள்ளே இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.  தகவல் அறிந்து, மாதவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து 26 தீயணைப்பு வாகனங்களில் 300க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

10க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் ரசாயனம், ஆயில் பேரல்கள் அதிக அளவில் இருந்ததால் அவை வெடித்து சிதறின.  இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர். தொடர்ந்து பல மணிநேரம் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயின் புகை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியது. மேலும் பேரல்கள் வெடித்து சிதறுவதால் மூலக்கடையில் இருந்து மாதவரம் மேம்பாலத்திற்கு போகக் கூடிய ஒரு வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேமிப்புக் கிடங்கு அருகாமையில் இருந்த பிளாஸ்டிக், மரம், டிவி போன்ற பொருட்கள் அடங்கிய சில தனியார்  குடோன்களும், சிறு தொழில் நிறுவனங்களும் தீப்பற்றி சேதமாகியது. அருகில் நின்ற 8 லாரிகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீவிபத்தில் சேத மதிப்பு பல கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. தீயினால் ஏற்பட்ட புகையால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த தீவிபத்து இரவாகியும் கட்டுக்குள் வராததால் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்களுக்கும், காவல்துறைக்கும் பெரும் சவாலாக இருந்தது. இந்த தீவிபத்தினால் மாதவரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

100 கோடி சேதம் சைலேந்திரபாபு பேட்டி
மாதவரம் தனியார் ரசாயன சேமிப்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து பற்றிய சம்பவம் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘இந்த தீவிபத்தில் சுமார் 100 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம்’’ என்றார்.

Tags : oil warehouses ,panic ,Private Oil Warehouse Private ,fire , Private, oil warehouses, terrific fire, panic in the month
× RELATED காரியாபட்டி அருகே பயங்கரம்: கல்குவாரி...