×

கணினி உதவியாளர், கேமரா ஆபரேட்டர் 1302 பேர் கூண்டோடு பணியிட மாற்றம்: பதிவு துறை ஐஜி அதிரடி உத்தரவு

சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் பணி புரிந்து வந்த கணினி உதவியாளர்கள் மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் என 1302 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பதிவு துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் கேமராக்களை இயக்கவும், கணினி சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்த அடிப்படையில் கணினி மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், தனியார் நிறுவனத்தின் சார்பில் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியமாக அந்த தனியார் நிறுவனம் சார்பில் தான் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கணினி உதவியாளர்கள் கேமரா ஆபரேட்டர்கள் இடைத்தரகர்கள் உடன் இணைந்து கொண்டு செயல்படுவதாக சார் பதிவாளர்கள் பதிவுத்துறை ஐஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். இந்த ஊழியர்கள் பெரும்பாலான அலுவலகங்களில், உரிய பொறுப்புக்க மீறிய நிலையில் செயல்படுவதாக, குற்றச்சாட்டினர். இவர்களால் தான் தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும் அவர்கள் ஐஜியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை பணியிட மாற்றம் செய்யவும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு பதிவுத் துறை ஐஜி அலுவலகம் சார்பில் கடிதம் எழுதியது. இதற்கு அந்த தனியார் நிறுவனமும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கணினி உதவியாளர்கள் 727 பேர், கேமரா ஆபரேட்டர்கள் 575 பேர் என மொத்தம் 1,302 பேரை பணி இடமாற்றம் செய்து பதிவு துறை ஐஜி ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் அந்தந்த பதிவு மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த கேமரா மற்றும் கணினி உதவியாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அவர்களை பணி இடமாற்றம் செய்திருப்பது அவர்களுக்கு ஊதியம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் சார்பதிவாளர் பலர் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டில் சிக்கிக் கொண்ட நிலையில் தங்களை பலிகடா ஆக்கி விட்டனர் என்று கணினி உதவியாளர்கள் மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் கணினி மற்றும் கேமரா உதவியாளர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து இருப்பது பதிவுத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Computer Assistant ,Camera Operator ,Workplace Change ,Cage: Registration Department IG Action Directive ,Registration Department , Registration Department
× RELATED தஞ்சை மாவட்டத்தில் தலைமை...