×

நெல்லையில் உதவி கலெக்டரான தஞ்சை ஐஏஎஸ் அதிகாரி கேட்ட நூதன வரதட்சணை

பேராவூரணி: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்த  மாரிமுத்து என்பவரது மூத்த மகன்  சிவகுரு பிரபாகரன்.  தந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு மரம் அறுக்கும் மில்லில் வேலை செய்து வருகிறார். தாயார் தென்னை ஓலையில் கீற்று பின்னும் வேலை செய்து வருகிறார். இந்த குறைந்த வருமானத்தில் தனது மகன் சிவகுரு பிரபாகரனை அதே ஊரில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்க வைத்தனர். பின்னர், அருகில் உள்ள புனவாசல் கிராமத்திற்கு சென்று சிவகுரு பிரபாகரன் பிளஸ் 2 படித்தார். மெரிட்டில்  சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் தேர்வு எழுதி கடந்த 2019ம் ஆண்டில் ஐஏஎஸ் ஆனார்.இந்தியாவில் 101வது ரேங்கிலும், தமிழகத்தில் 3 வது இடத்திலும் வெற்றி பெற்றார். தற்போது அவர் திருநெல்வேலியில் உதவி கலெக்டராக பணியில் உள்ளார்.

சாதாரண மாப்பிள்ளைகளுக்கே பெண் வீட்டார் படையெடுக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிக்கு பெண் கொடுப்பதில் கடும் போட்டி இருக்காதா, என்ன? ஆனால் வலிய வந்த பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வைத்த ஒரு கோரிக்கையை ஏற்று தலைதெறிக்க ஓடினார்கள். இருப்பினும் கடந்த 26ம் தேதி உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரனுக்கு சென்னையை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணபாரதியுடன் திருமணம் நடந்தது. கிருஷ்ணபாரதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரி பேராசிரியரின் மகள்.

எல்லா பெண் வீட்டாரும் தப்பி ஓடிய நிலையில் டாக்டர் கிருஷ்ணபாரதி மட்டும் எப்படி சம்மதித்தார், சிவகுரு பிரபாகரன் வைத்த கோரிக்கை என்ன என்று கேட்டபோது  அவர் கூறியதாவது: டாக்டரை மட்டுமே திருமணம் செய்வேன்.
அந்த டாக்டரும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் கிராமத்தில் தங்கியிருந்து இந்த பகுதி மக்களுக்கு இலவச வைத்தியம் செய்ய வேண்டும் என்பது தான் நான் வைத்த ஒரே கோரிக்கை. அதைத்தான் வரதட்சணையாகவும் எதிர்பார்த்தேன். அதற்கு கிருஷ்ணபாரதி சம்மதம் தெரிவித்தார். எனவே திருமணம் செய்து கொண்டேன் என்றார்.

Tags : Assistant Collector IAS ,Nandana ,Tanjay IAS , IAS
× RELATED விதை நேர்த்தி விழிப்புணர்வு