×

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மக்காசோளத்தில் தயாரிக்கப்படும் பைகளை பயன்படுத்தலாம்: கலெக்டர் தகவல்

வேலூர்: வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது: ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை தமிழக அரசு முற்றிலும் தடைசெய்துள்ளது. வேலூர் மாவட்டத்திலும் இதன் பயன்பாடுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பதுக்கல் முறையில் விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்து பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல், அபராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் பொதுமக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்த ஒன்றாக உள்ளதால் இதற்கு பதிலாக நூறு சதவீதம் மக்கும் மற்றும் உரமாகும் தன்மையுடைய சுற்றுசூழல் பாதிப்பு இல்லாத மக்காசோளத்தில் தயாரிக்கும் பைகள் மாவட்ட நிர்வாகம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மக்காச்சோள பைகள் விற்பனை வேலூர் அண்ணாசாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதைதெடர்ந்து மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வேலூரில் அண்ணா சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்திலும், அணைக்கட்டு ஒன்றியத்தில் கெங்கைநல்லூர் ஊராட்சியில் உள்ள வட்டார இ-சேவை கட்டிடத்திலும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில், காவனூர் ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்திலும், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், காட்பாடி ஒன்றியத்தில், மெட்டுகுளம் ஊராட்சி கிராம சேவை மையத்திலும், பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில், டி.டி.மோட்டூர் ஊராட்சியிலும், வேலூர் ஒன்றியத்தில், பூமாலை வணிக வளாகத்திலும், குடியாத்தம் ஒன்றியத்தில் கொண்டசமுத்திரம் கிராம சேவை மையத்தில் என மொத்தம் 8 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மக்காசோளத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து அளவுகளில் கேரிபைகள், ஓட்டல் கவர்கள், மளிகை கவர்கள், ஷாப்பிங் பைகள், குப்பை கொட்டும் பைகள், மருத்துவமனைக்கான பைகள் ஆகியவை விற்பனைக்கு உள்ளது. இப்பைகள் மண்ணில் புதைந்தால் 6 மாதத்தில் அப்படியே இருந்தால் 18 மாதங்களில் மக்கிவிடும். இதனை பரிசோதனையும் செய்து கொள்ளலாம். அதாவது, ஆன்ராய்டு மொபையில் icpa செயலி டவுன்லோது செய்து or code வழி ஸ்கேன் செய்து உண்ணமைதன்மை பரிசோதிக்கலாம். டை குளோரோ மீதேன் அமிலத்தில் கரையும் தன்மையுடையது.

மக்காசோள பைகளை பயன்படுத்துவதால் சுற்று சூழலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் பூமி வெப்பமயமாதலை தடுக்க இயலும், ஆகவே ஒவ்வொருவரும் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்பாடுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மக்கும் மற்றும் உரமாகக்கூடிய மக்காசோள பைகள், துணி பைகள், பாக்கு மட்டை தட்டுகள், மந்தாரை இலைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். அனைத்து வகை வியாபார இடங்கள், உணவகங்கள், மளிகை கடைகள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டுக்கு மக்காசோள பைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Tags : Plastic
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...